தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றி தெரிவித்து இன்பதுரை எம்எல்ஏ அறிக்கை

தாமிரபரணி ஆறு− கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டத்தின் 4-ம் கட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு


தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றி தெரிவித்து இன்பதுரை எம்எல்ஏ அறிக்கை



ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியான திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வறட்சியைப் போக்குவதற்காக தாமிரபரணி ஆறு − கருமேனியாறு −நம்பியாறு இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.


 இந்த திட்டத்தை சாத்தான்குளம் இடைத்தேர்தலின்போது மாண்புமிகு அம்மா அவர்கள்  அறிவித்தார்கள்.


மத்திய அரசின் விரைவுபடுத்தப்பட்ட பாசன திட்டத்தின்மூலம் செயல்படுத்தபடும் இத்திட்டத்திற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு தான் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.


 நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை  மத்திய அரசு ரூபாய் 872 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றலாம் என்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை செயலாக்குவதன் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் சுமார் 17002 ஹெக்டேர் புதிய பாசன பரப்பு உள்பட மொத்தம் 23400 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். 


திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 13 ஆயிரத்து 481 ஹெக்டேரும்  தூத்துக்குடி மாவட்டத்தில் 959 ஹெக்டேரும் பாசன வசதி பெறும். 


இந்த திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் தொகுதி மட்டுமின்றி பாளையங்கோட்டை நாங்குநேரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதி  ஆகிய 4 தொகுதிகளும் திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்களும் ஆக மொத்தம் 50 கிராமங்களும் பாசன வசதி மற்றும் குடிநீர் வசதிகளை நிறைவாக பெறும்.


 இத்திட்டத்தின் மூன்றாம் கட்ட பணிகள் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் கடந்த 19. 2. 2019 அன்று தொடங்கப்பட்டு தற்போது போர்க்கால வேகத்தில் நடைபெற்று வருகிறது.
வருகிற செப்டம்பர் மாதம் மூன்றாம் கட்ட பணிகள் முழுமையாக நிறைவேறும் நிலையில் உள்ளது.


 இந்நிலையில் நான்காம் கட்ட பணிகளுக்காக தற்போது ரூபாய் 160 கோடிக்கு ஒப்புதல் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


 இந்த அரசாணை வெளியிட்டதின் மூலமாக  திட்டத்தின் மொத்த  பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு 595 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த அரசாணையை தொடர்ந்து வருகிற ஜுன் மாத தொடக்கத்தில் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு ஜுலை மாதத்தில் பணிகள் தொடங்கும் என
 அறிவிக்கப்பட்டுள்ளது.


விவசாயிகளின் தலைமகனான எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசு விவசாயிகளின் நலன் அறிந்து குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தின் தென் பகுதியில் உள்ள ராதாபுரம் தொகுதியின் வறண்ட நிலங்களுக்கு நீர் வழங்குவதற்காக மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் நின்று 
கேட்கிறபோது எல்லாம் நிதி வழங்கி தற்போது நான்காம் கட்ட பணிகளுக்காகவும் ரூபாய் 160 கோடி ஒதுக்கீடு செய்து தற்போது ஆணை பிறப்பித்துள்ளதை அறிந்து தொகுதி மக்கள் நெஞ்சமெல்லாம் ஆனந்தமழை பெய்கிறது!


 விவசாய பெருமக்கள் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அரசாணையை வெளியிட்டுள்ள தமிழக அரசை  கரங்குவித்து வணங்குகிறேன். 


ராதாபுரம் தொகுதி மக்கள் சார்பிலும்,  விவசாய மக்கள் சார்பிலும்  என் விழியோரம் துளிர்க்கும் சந்தோஷ கண்ணீரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பாதங்களில் பன்னீராய் தூவி எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


 இவ்வாறு அந்த அறிக்கையில் இன்பதுரை எம்எல்ஏ  கூறியுள்ளார்.


Previous Post Next Post