சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரூ. 35 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதனால் ப்யணிகள் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் சரக்கு விமான சேவை தொடர்ந்து நடந்து வருகிறது.
சென்னையில் இருந்து மலேசியாவிற்கு செல்ல இருந்த சரக்கு பொருட்களை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெரிய மரப்பெட்டிகளில் எவர்சில்வர் எண்ணெய் விளக்குகள் அனுப்பப்படுவதாக இருந்தது.
இதில் சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் மரப்பெட்டிகளை உடைத்து பார்த்தனர். அதில் எண்ணெய் விளக்குகளுக்கு பதிலாக செம்மரக்கட்டைகள் மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். ரூ.35 லட்சம் மதிப்புள்ள 1050 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
மரப்பெட்டியில் இருந்த முகவரி மற்றும் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது போலியானது என தெரியவந்தது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்த போது டெல்லியை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவரின் வாகனத்தில் மரப்பெட்டிகள் கொண்டு வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து டெல்லி ஆசாமியை தேடி வருகின்றனர்.