நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி கூட்டப்புளி அருகே உள்ள கண்ணங்குளம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் மரியதாசன் மகன் ராஜா. மீனவரான இவர் கடந்த 13ஆம் தேதி சக மீனவர்களோடு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று விட்டு கரை திரும்பும்போது ராட்சத அலையில் படகு கடலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படகின் அடியில் சிக்கி தண்ணீரில் மூழ்கிய ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதேபோல் கூட்டப்புளியைச் சேர்ந்த மகேந்திரன் மிக்கேல் இவர் கடந்த ஆறாம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கரைக்கு அழைத்துவந்த மீனவர்கள் அஞ்சுகிராமத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மகேந்திர மிக்கேலை தூக்கிச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
உயிரிழந்த மீனவர்கள் ராஜா மற்றும் மகேந்திர மிக்கேல் ஆகியோரின் வீட்டிற்கு நேற்று நேரில் சென்ற ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன்
தனது சொந்தப் பணத்திலிருந்து இரு குடும்பத்தாருக்கும் தலா ரூ10 ஆயிரம் நிதி உதவியும் வழங்கினார்.
மேலும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து நிவாரண உதவிகளையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினரிடம் இன்பதுரை எம்எல்ஏ உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் வள்ளியூர் ஆழகானந்தம் ராதாபுரம் அந்தோணி அமல்ராஜ் அதிமுக நிர்வாகிகள் கூட்டப்புளி அகிலன், அடைக்கலம், எட்வின், பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.