ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்க வேண்டும் என தமிழக அரசிடம் பல்வேறு தரப்பினர் கோரி வந்தனர்.
ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ இன்பதுரை இரண்டு வாரங்களுக்கு முன்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.
அம் மனுவில் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக மகராஷ்டிர மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களில் ஏராளமானோர் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை தமிழகத்திற்கு அழைத்துவர அரசு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரி இருந்தார்.
இதையடுத்து பிறமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்க தமிழக அரசு சார்பில் தனி வெப்சைட் ஒன்றை நிறுவியதோடு அதில் தங்கள் பெயர்களை பதிவு செய்யும்படியும் அறிவித்தது.இவர்களை மீட்கும் பணிகளுக்கென்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அதிகாரி என்ற வகையில் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலையும் தமிழக அரசு அறிவித்தது.
இதை தொடர்ந்து இணையம் மூலமாக பிற மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.
மகராஷ்டிர மாநிலத்திலிருந்து அவ்வாறு பதிவு செய்த தமிழர்களில் முதற்கட்டமாக சுமார் 450 பேர் 16 தனி பேருந்துகள் மூலமாக தமிழகத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 45 பேர் வந்த பேருந்து நேற்று காலை 11மணிவாக்கில் நெல்லை மாவட்ட எல்லையான கங்கை கொண்டான் வந்தடைந்தது. இவர்கள் அனைவரும்
உடனடியாக அருகிலுள்ள கங்கைகொண்டான் தொழிற் பூங்காவில் தங்கவைக்கப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் நாங்குநேரி தாலுகாவைச் சேர்ந்த ஒருவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.அவர் மருத்துவமனைக்கு கொரோனோ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்.
அவ்வாறு மகாராஷ்டிராவிலிருந்து தமிழக அரசால் அழைத்து வரப்பட்டவர்களில் சுமார் 18 பேர் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களுக்கு
நேற்றே கொரோனா பரிசோதனை முடிவடைந்து கொரோனா தொற்று இல்லை என இன்று முடிவுகள் தெரிந்ததால் இவர்கள் அனைவரும்
மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த தனி வாகனங்கள் மூலம் தங்கள் சொந்த கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.இவர்கள் அனைவரும் தமது வீடுகளில் தம்மை தனிமைபடுத்தி கொள்ளவேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.