அதிமுக நிர்வாகி வீட்டு முன்புறம் வைத்து படுபந்தாவாக வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதி: ரேசன்கடைக்காரர் மீது நடவடிக்கை பாயுமா?


கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு பணம் இருக்காது என்பதால் அரசே 1000 ரூபாய் பணம் உள்ளிட்ட ரேசன் பொருட்களை வழங்க அறிவித்தது.


வீடியோ இதோ:



அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை வரை ரேசன் கடைகளில் பணம் ரூ.1000 மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டன. வெள்ளிக்கிழமைக்கு பிறகு வீடுவீடாக சென்று இந்த பணத்தை வழங்கிட அரசு உத்தரவிட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்தவும் தமிழக அரசு இவ்வாறு அறிவித்தது. 


இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் ச.கண்ணணுர் பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவி பணத்தை அதிமுக நிர்வாகியின் வீட்டு முன்புறம் வைத்து வழ்ங்கி கூட்டம் கூட்டி அரசு விதியை மீறி உள்ளனர். 


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் ச.கண்ணணுர் பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில்,  தமிழக அரசு கொடுக்கும் நிவாரண நீதியான ரூபாய் 1000. வீடு வீடாக சென்று கொடுக்குமாறு உத்தரவிட்ட பின்னரும் நேற்று *(4.4.2020 ) அந்த விதியை மீறி உள்ளனர்.


ரேஷன் கடை ஊழியர்கள் பூமிநாதன் மற்றும் பீட்டர் ஆகியோர் ஒன்று சேர்ந்து கொண்டு ச.கண்ணணுர்  அதிமுக முக்கிய பிரமுகர்களை வைத்துக்கொண்டு அதிமுக பிரமுகரான மணிகண்டன்  வீட்டின் வெளியே மேஜையை அமைத்து கொரோனா நிவாரண நிதியை சொந்தப்பணத்தை தானம் தருவது போல பந்தாவாக வழங்கி உள்ளனர். அதுவும் மக்களை திரட்டி 50க்கு மேற்பட்டவர்களை நிற்க வைத்து இந்த நிதியை வழங்கி உள்ளனர்.


இதை தட்டிக்கேட்டபோதும், அந்த செயலை நிறுத்தவில்லை.


தமிழக அரசும், நீதிமன்றமும் மக்களின் வீட்டிற்கே சென்று கொரோனா நிவாரண தொகை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டும், நோய் தடுப்பு நடவடிக்கையை மீறி மக்களை  நிற்கவைத்து கொடுத்தனர் என்பது விதிமீறலாகும். 


விதியை மீறியது மட்டும் இல்லாமல், கொரோனா நோயை பரப்பும் விதமாக அவர்கள் செயல்பட்டதாகவும், அவர்கள் மீது துறைவாரியான  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இது போன்ற நோய் பரவும் நேரங்களிலாவது அரசியல் கட்சியினர் ஆதாயம் தேடும் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளலாமே! 


Previous Post Next Post