கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடந்த மாதம் 25ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். எனவே அவர்களிடையே உள்ள திறமையை வெளிக்கொண்டுவரவும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது அதன்படி கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டது. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்புவரை உள்ள மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி இந்த போட்டியில் பங்கேற்கலாம். 2 நிமிடங்களில் ஒளிபரப்பக்கூடிய வகையில் குறும்படம் அமைந்திருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்டம் முழுவதும் 312 மாணவ மாணவிகள் குறும்படங்களை எடுத்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவைத்தனர். அதில் 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்தது. அப்போது போட்டியில் வெற்றிபெற்ற திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர்கள் பேட்ரிக்லிபன் பிரபாகரன் சுருதி அபிநயா, அக்சயா போளூர் கோகுலபிரியா செய்யாறு விக்னேஷ் உள்ளிட்ட 6 பேருக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பரிசு வழங்கி பாராட்டினார். சமூக இடைவெளியை பின்பற்றி பரிசுகளை மாணவர்கள் பெற்றுச் சென்றனர் இதில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்தமோகன், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வன், பள்ளி துணை ஆய்வாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்