கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடமாடும் காய்கறி அங்காடி தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் கரோனா வைரஸ் தடுப்பு குறித்த தமிழக முதல்வரின் ஒலி, ஒளிக்காட்சியை ஒளிபரப்புவதற்கான வாகனத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு பணியாற்றும் 12 பெண் ஊழியர்களுக்கு தலா 1,000 வீதம் 12 ஆயிரத்தை தனது சொந்த நிதியில் இருந்து அமைச்சர் வழங்கினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எம்.எல்.ஏ சின்னப்பன்,கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி ஆணையர் ராஜாராம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் அனிதா, டிஎஸ்பி ஜெபராஜ் , மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சத்யா, அதிமுக நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன்,அதிமுக விவசாய அணி நிர்வாகியும், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினருமான ராமச்சந்திரன், கோவில்பட்டி பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் ராமச்சந்திரன் என்ற தாமோதரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், பழனி குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்தியாவை பொருத்தவரை பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக கூடியவர்கள் மூலமாகத்தான் நோய்த்தொற்று வந்ததே தவிர இங்குள்ள மக்களால் எந்த பிரச்சினையும் இல்லை. மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து தங்களையும், தங்களது குடும்பத்தினரையும், நாட்டையும் காப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது. ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பதை அனுமதிக்க முடியாது. இதுகுறித்து ஆய்வு கூட்டம் நடத்தி கட்டுப்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு விரைவில் முழு கவச உடை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் அறிவுரையின் படி விளக்குகள் அணைப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தால் அதனை தாராளமாக அரசுக்கு தெரிவிக்கலாம். விளக்குகளை அணைத்து தீபங்கள் ஏற்றுவது என்பது மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து வீட்டில் இருக்கிறோம் என்பதை காட்டுவதாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் அறிவுரையைக் நல்லதாக எடுத்துக் கொள்வதே நாட்டுக்கு நல்லது, என்றார் அவர்.