நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பணகுடி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும்
நாட்டு செங்கல்களுக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடும் கிராக்கி உள்ளது.
தற்போது தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் செங்கல் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டும் அதனை வியாபாரத்திற்காக வாகனங்களில் எடுத்துச் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் மற்றும் அதனை நம்பி தொழில் செய்யும் பணியாளர்கள் மற்றும் செங்கல் சூளை கூலித்தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட நாட்டுச் செங்கல் சூளை உரிமையாளர் சங்க தலைவர் ராஜன், செயலாளர் ஸ்டீபன், பொருளாளர் டேவிட் ஆகியோர் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரையை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:−
தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கட்டுமான தொழிலை தொடரலாம் என அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் கட்டுமான தொழிலின் மூலப்பொருட்களில் ஒன்றான செங்கல் தயாரிப்பதற்கும் வாகனங்கள் மூலம் செங்கல்களை எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்கும் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.
எனவே செங்கல் உற்பத்தி தொழிலை தொடரவும் அதனை வியாபாரிகள் வாகனங்களில் எடுத்துச் செல்லவும் அரசிடம் உரிய அனுமதி பெற்று தர வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
அவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட இன்பதுரை எம்எல்ஏ உடனடியாக தமிழக பேரிடர் மேலாண்மை துறை செயலாளரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான ராதாகிருஷ்ணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவரிடம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தற்போது தடை உத்தரவுகள் தளர்த்தப்பட்டு கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறலாம் அதற்கு தடை ஏதும் இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுமான தொழிலுக்கு மூலப் பொருட்களில் ஒன்றான செங்கல் உற்பத்தியை தொடங்க 23-4-2020 அன்று அரசாணை எண்; 203 மூலம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தற்போது செங்கல் உற்பத்திக்கு தடை ஏதும் இல்லை.
ஆனால் அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் செங்கல்களை வியாபாரிகள் வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று அனுமதி மறுப்பதன் மூலம் செங்கல் தயாரிப்பு தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான ஏழை கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கபடுகிற நிலை உள்ளது. மேலும் கட்டுமான தொழில்களையும் தொடரமுடியாத நிலை உருவாக வாய்ப்புள்ளது.
எனவே செங்கல் உற்பத்தி செய்யவும் அதனை வாகனங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்யவும் உரிய அனுமதி வழங்க வேண்டும் என இன்பதுரை எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த தமிழக பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த கோரிக்கையை அரசு கவனமுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.