கன்னியாகுமரி மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு பாஸ் வழங்குவதை எளிமையாக்குங்க: இன்பதுரை எம்.எல்.ஏ சொல்கிறார்


ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்களுக்கு ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது :−


ராதாபுரம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த திசையன்விளை, உவரி, வள்ளியூர்,ராதாபுரம் கூடன்குளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் பகுதிக்கு வெகு அருகாமை என்பதால் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் நாகர்கோவில் பகுதியிலுள்ள தனியார்  மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவது வழக்கம்.


இந்த நிலையில் தற்போது 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதன் காரணமாக  கன்னியாகுமரி மாவட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பகுதியைச் சேர்ந்த நோயாளிகள் மற்றும் மகப்பேறு தொடர்பான மாதாந்திர செக்−அப்களுக்கு  செல்பவர்கள் கன்னியாகுமரி மாவட்ட எல்லையான அஞ்சுகிராமம் மற்றும் ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடிகளில் அம்மாவட்ட காவல் துறையினரால் தடுக்கப்பட்டு பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.


 உரிய மருத்துவ ஆவணங்களை காட்டியும்  கூட காவல் துறையினரோ வருவாய்த் துறையினரரோ அவர்களை செல்ல அனுமதிப்பதில்லை.


 எங்கள் தொகுதி கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால்  இங்கு அதிகம் பேர் சிறுநீரக பாதிப்பால் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களில் சிலர் வாரத்தில் 2 அல்லது 3 முறை டயாலிஸிஸ் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவர்கள்.ஆசாரிபள்ளம் மருத்துவமனையிலோ அல்லது அரசு காப்பீட்டு திட்டம் உள்ள நாகர்கோவில் தனியார் மருத்துவமனைகளுக்கோ டயாலிஸிஸ் போன்ற அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள்.


 அவ்வாறு டயாலிசிஸ் செய்வதற்காகவோ மாதாந்திர பரிசாதனைகளுக்கோ செல்லும்போது குமரிமாவட்ட சோதனைச் சாவடிகளில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கடும் அவதிப்பட்டுவருகின்றனர்.


 இவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள் அல்லது பாமரர்கள்.  அவர்களிடம் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய செல்போன்கள் இருப்பதில்லை.



 எனவே இவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம்  அவ்வப்போது ஆன்லைனில் உரிய அனுமதி பெறுவதில் அதிக நடைமுறை சிக்கல்கள் உள்ளது. 
எனவே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஆன்லைனில் அனுமதி பெறுவதற்கு பதில்  அருகிலுள்ள காவல் நிலையத்தில் அனுமதி பெறுவது அல்லது நமது மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை குமரிமாவட்ட சோதனைச் சாவடிகள் அருகே நிறுத்தி அவர்கள் மூலமாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் உடனுக்குடன் அனுமதி பெற்று தரும் வசதியை ஏற்படுத்தி   நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் படும் இன்னல்களை களைய உரிய  நடவடிக்கை எடுக்கவெண்டுமென்று பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.


இவ்வாறு அந்த  மனுவில் இன்பதுரை எம்.எல்.ஏ கூறியுள்ளார்.


Previous Post Next Post