ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீசுக்கு நேற்று முன்தினம் ஒரு கோரிக்கை விடுத்திருந்தார்.
அதில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த திசையன்விளை, உவரி, வள்ளியூர்,ராதாபுரம் மற்றும் பணகுடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் அவர்கள் குமரி மாவட்ட காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு அவதிப்படுகின்றனர். எனவே இ−பாஸ் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தநிலையில் இன்பதுரை எம்எல்ஏவின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் குமரிமாவட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு 24 மணிநேரமும் உடனடியாக அனுமதி வழங்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த அனுமதி பாஸ் (இ− பாஸ்) உடனடியாக வழங்கும் வகையில் காவல்கிணறு சோதனைச்சாவடியில் செந்தில், பாலமுருகன், கதிரவன் சீனிவாசன் ஆகிய 4 துணை வட்டார வளர்ச்சி நிலை அதிகாரிகளை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆறு மணி நேரத்திற்கு ஒருவர் என சுழற்சி முறையில் இவர்கள் அந்த சோதனைச்சாவடியில் 24 மணிநேரமும் பணியாற்றுவார்கள்.அவசர மருத்துவ சிகிச்சைகளுக்காக குமரி மாவட்டத்திற்கு செல்பவர்கள் இந்த அதிகாரிகளிடம் உரிய மருத்துவ ஆவனங்களை காட்டி உடனுக்குடன் காவல்கிணறு சோதனைச் சாவடியிலேயே 24 மணிநேரமும் அனுமதி பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் எந்த சிரமமுமின்றி மருத்துவம் பார்க்க குமரிமாவட்ட மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையை இன்பதுரை எம்எல்ஏ வரவேற்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.