இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை சுமார் 2900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த, மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை போர் கால அடிப்படையில் செய்து வருகின்றனர். வருகிற ஏப்ரல் - 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு தடை ஏற்படாமல் பார்த்துக் கொண்டதுடன் நிவாரண உதவிகளையும் அரசுகள் செய்து வருகின்றன.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் தேவையற்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. மேலும் டிக் - டாக் செயலியின் மூலம் பிரதமரை கிண்டல் செய்து வீடியோக்கள் வெளியிடுவதோடு, கொரோனா வைரஸ் பற்றிய பல தவறான, உண்மைக்கு புறம்பான வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இது மக்கள் மத்தியில் தேவையற்ற பயத்தை உருவாக்கி வருகிறது.
தங்களது உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்ற பாடுபடும் ஆட்சியாளர்களையும், மருத்துவர்களையும், சுகாதார பணியாளர்களையும், காவல் துறையினரையும், தூய்மை பணியாளர்களையும் கொச்சைப்படுத்தி, கேலி செய்து வெளியிடப்படும் வீடியோக்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
இது போன்று சமூக வலைதளங்களில் செயல்படுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தற்போதைய சூழலில் இயலாத காரியம்.
ஆதலால், ஊரடங்கு காலம் முடிவடையும் வரையில் டிக் - டாக் செயலியை தடை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்
Tags:
மாவட்ட செய்திகள்