ஒருத்தருக்கு கூட தொற்று இல்லை.. கொரோனாவை தட்டி தூக்கிய ஈரோடு.. மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

கொரோனா நோயால் ஆரம்ப கட்டத்திலேயே பாதிக்கப்பட்ட மாவட்டம் ஈரோடு. அங்கு வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி இருந்தவர்களால் கொரோனா நோய்த்தொற்று பரவியது.



இதனால் மாவட்ட நிர்வாகம், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 


இதன்மூலம் 70 கொரோனா நோயாளிகள் இருந்த ஈரோடு மாவட்டம், இன்று கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.


இன்று கடைசியாக இருந்த 4 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்து விட்டார். இதன்மூலம் இன்றைய நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா இல்லை.



முதல்கட்டப்பரவலில், கொரோனாவை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தி, வெற்றி கொள்ளும் மாவட்டம்  ஆனது ஈரோடு.   ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையிலான அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்கள், போலிஸ் எஸ்.பி., சக்திகணேசன் தலைமையிலான போலீசார், மருத்துவத்துறையினர் உள்பட அனைத்து அரசுத்துறையினரும்  இதற்காக அரும்பாடு பட்டு இருந்தனர். 



கொரோனாவை ஒழிக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் மற்ற மாவட்டங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்தது. எனவே ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 


எல்லோரையும் குணப்படுத்தி விட்டு வீட்டுக்கு அனுப்பி விட்ட நாளான இன்று கூட 513 பேருக்கு கொரோனா சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.


கடந்த 14 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதனால் சிகப்பு மண்டல பகுதியாக இருந்த ஈரோடு தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாறுகிறது. 


இன்னும் 14 நாட்கள் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்றால் பச்சை மண்டலமாக மாறும்.


Previous Post Next Post