நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறிய சலூன் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரானா தொற்று அதிகரித்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அனுமதிக்கப்பட்ட மளிகை பொருட்கள்,காய்கறி கடைகள் மற்றும் பால்,மருந்தகம்,இறைச்சி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சலூன் கடைகள்,பியூட்டி பார்லர்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களில் சலூன் கடைகளை திறந்து பணிபுரிவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கு புகார் வந்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிகிழமை அன்று பாளை மண்டலத்தில் 3 க்கும் மேற்ப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளும்,காவல் துறையினரும் இணைந்து சீல் வைத்தனர்.
மேலும் நகரின் அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி மற்றும் காவல்துறை மூலம் ஒலிப்பெருக்கியின் வாயிலாக அறிவிப்பு செய்த பின்னரும் அரசின் உத்தரவினை துட்சமென மதித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் எதிரில் உள்ள ஒரு கடையை துணிச்சலாக திறந்து முகச்சவரம், சிகை அலங்காரம் செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் இளங்கோ, காவல் உதவி ஆய்வாளர் மகேஷ்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் பெருமாள், மாரியப்பன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் வசந்த், செந்தில், காமராஜ், ரேவதி, எல்.சி.எஃப்.ராஜா, கண்ணன், சதீஷ்குமார், மாநகராட்சி பணியாளர் சுரேஷ் ஆகியோர் விரைந்து சென்று அந்த கடைக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.
அதிகாரிகள் வருவதை முன்னரே தெரிந்து கொண்ட கடை உரிமையாளர், ஊழியர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் மீது ஊரடங்கு உத்தரவை அவமதித்ததாக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.