பணியில் இருக்கும் காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று வராமல் தங்களை தற்காத்து கொள்ளும் வழிமுறைகளை அவர்கள் பணியாற்றும் இடத்திற்கே மருத்துவர்கள் சென்று ஆலோசனை வழங்கினர்.
புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கடந்த பத்து நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.. இந்நிலையில் மக்கள் வெளியே வராமல் தடுக்க ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் இடுப்பட்டுள்ளனர். அவர்கள் புதுச்சேரியில் உள்ள சிக்னல்கள், முக்கிய சந்திப்புகள் ஆகிய இடங்களில் சோதனை சாவடி அமைத்து அத்தியாவசியம் இன்றி வரும் மக்களுக்கு அறிவுரைகள் கூறியும் சிலர் மீது வழக்குகளும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பணியில் இருக்கும் காவலர்கள் தங்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்று அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். அதில் வெயிலில் நிற்கும் காவலர்கள் அதிக தண்ணீர் அருந்த வேண்டும், கைகளை பல முறை சோப்பு பயன்படுத்தி கழுவவேண்டும், கை உரைகள் அணிய வேண்டும், வைட்டமின் சி நிறைந்த பழங்களை உன்ன வேண்டும், குறிப்பாக சமூக இடைவெளி விட்டு காவலர்கள் நின்று பணியாற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும் மனரீதியாக தங்களை எப்படி பாதுகாத்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.