திருப்பூர் "சேவாபாரதி" அமைப்பின் சார்பில் நடைபெற்றுவரும் கொரோனா நோய் தொற்று நிவாரணப்பணிகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடனும், சேவாபாரதி தன்னார்வலர்களின் சீரிய செயல்பாட்டுடனும் நடைபெற்று வருகிறது. ஆவின் பால் விநியோகம், பச்சிளம் குழந்தைகளுக்கு இலவசமாக பசும்பால் விநியோகிப்பது, மளிகைப்பொருட்கள் விநியோகம், காய்கறிப்பொருட்கள் விநியோகம், மருந்துப்பொருட்கள் விநியோகம், இலவச ஆம்புலன்ஸ் & மகப்பேறு தொடர்பான சேவைகள், தன்னார்வலர்கள் மூலம் தினந்தோறும் இரத்ததானம் செய்தல், ஏழை எளிய மக்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தினந்தோறும் உணவு வழங்குதல், பிற மாநில & மாவட்ட மக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்க உதவி செய்தல் போன்ற எண்ணற்ற பணிகளை தொய்வில்லாமல் மக்களுக்கு நேரடியாக செய்து வருகிறது. மேலும் தன்னார்வலர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து அவர்களின் உடல் நலத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.
கொரோனா நோய்த்தொற்றால் பாரதம் முழுவதும் நடைமுறையிலுள்ள ஊரடங்கினால் ஏழை, எளிய மக்கள் உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு சிரமப்படுவதை கருத்திற்கொண்டு சேவாபாரதி தன்னார்வலர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட "உணவு, மளிகைப் பொருட்கள் & காய்கறிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் துவக்க நிகழ்ச்சி" இன்று (18.04.2020, சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் R.S.S கோட்டத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் E.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. சேவாபாரதி மாவட்ட தலைவர் T.R.விஜயகுமார் முன்னிலை வகித்தார். சேவாபாரதி மாவட்ட பொதுச்செயலாளர் G.மோகன்குமார் வரவேற்புரையாற்றினார். திருப்பூர் நகர R.S.S தலைவர் விவித் K.வாசுநாதன், தென்பாரத சேவா ஒருங்கிணைப்பாளர் பத்மகுமார், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்பிரமணியம், விவேகானந்தா பள்ளி ட்ரஸ்டி பேராசிரியர்.S.சுவாமிநாதன், BJP வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், BMS அமைப்பின் மாநில செயலாளர் சந்தானகிருஷ்ணன், சக்க்ஷம் அமைப்பின் மாவட்ட தலைவர் ரத்தினசாமி, லகு உத்யோக் பாரதி அமைப்பின் மாவட்ட தலைவர் கணேசன், ஹார்வி குமாரசாமி மண்டபத்தின் ட்ரஸ்டி கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொண்டு முதற்கட்டமாக சுமார் 25 பயனாளிகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட "16 வகையான பொருட்களை" வழங்கினர்.
மேலும் சேவாபாரதி & விவேகானந்தா பள்ளி மூலம் பேக்கிங் செய்யப்பட்ட சுமார் "3000 எண்ணிக்கையிலான பொருட்கள் கிட்" ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று நேரடியாக வழங்கப்படவுள்ளது. நிகழ்ச்சியின் இறுதியில் R.S.S மாவட்ட இணைச் செயலாளர் கோபால் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் சேவாபாரதி தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்