ஒரு மனுசன் வாழ்க்கைல நாசமா போகனும்னா சீட்டாட்டம், குடி, லாட்டரி, போதை போன்ற பல கெட்ட் பழக்கங்களில் ஒன்று இருந்தால் போதும்; வாழ்க்கையை மட்டும் இல்ல கையில இருக்கிற கடைசி காசையும் இழந்து விட்டு நடுத்தெருவுக்கு வந்து விடலாம்.
கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லோரும் வீட்டில் முடிந்தளவு இருக்கிறார்கள். மதுக்கூடங்களுக்கும் பூட்டு போட்டாச்சு, லாட்டரி நம்ம தமிழ்நாட்டிலேயே கிடையாது. போதை வஸ்துகளை தேடிப்போறது மிகக் கடினமான விஷயம்.
இப்படி இருக்கையில், தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் வீடுகளில் இருக்கும் இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் ஆன்லைன் சீட்டாட்டத்தில் கோடிகளில் பணம் புரளுதாம். மேலும், நேரில் சீட்டாடினாலே எல்லாத்தையும் உருவிட்டு விட்டுருவாங்க.ஆன்லைனில் சொல்ல வேண்டியதே இல்லை, அக்கவுண்ட்டில் இருக்கிற கடைசி காசு வரைக்கும் உருவிவிட்டு ஆண்டியாய் அலைய விட்டு விடுகிறார்கள்
இந்திய உச்சநீதிமன்றமே ஆன்லைன் ரம்மி போன்ற சீட்டாட்டங்கள் அறிவு சார்ந்த விளையாட்டு தான், அது சூதாட்டமல்ல என்Ru சொல்லி விட்டதாக, ஆன்லைன் சீட்டாட்ட நிறுவனங்கள் பதிவிட்டு ஆசை வார்த்தை கூறி அப்பாவி இளைஞர்களை தன்பக்கம் இழுத்து விடுகின்றன.
2020 ம் ஆண்டில், 1 பில்லியன் டாலர் வர்த்தகம் ஆன்லைன் விளையாட்டு என்கிற சூதாட்ட மார்க்கெட்டில் புரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது கொரோனா விடுமுறை வேறு விட்டு விட்டதால், வீட்டில் இருக்கும் பலர் தங்களது மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளை விளையாட களத்தில் இறங்கி விட்டனர்.
விளைவு, வேறென்ன.. வழக்கமான சீட்டாட்டம் போல, அத்தணையையும் அவிழ்த்து விட்டுத்தான் அனுப்புகிறார்கள். சென்னையை சேர்ந்த இளைஞர்கள் கொரோனா ஊரடங்கு துவக்கத்திலேயே ஏராளமான பணத்தை ஆன்லைன் ரம்மியில் தோற்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை கூட காண முடிகிறது.
இப்போது அனைத்து வியாபார மார்க்கெட், கடைகள் சாத்தப்பட்டு விட, இந்த ஆன்லைன் சீட்டாட்டக் கம்பெனிகள் மட்டும், டிவி, செய்தித்தாள்கள், மற்றும் வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, வீட்டில் இருக்கும் பெரும்பாலோனோரை ஈர்த்து இந்த சீட்டாட்ட விளையாட்டுகளுக்கு அடிமைப்படுத்தி விடுகிறார்கள். ஆளாளுக்கு போனிலும் கம்ப்யூட்டர்களிலும் விளையாட ஆரம்பித்து விட்டனர்.
இதனால் வாங்கிய சம்பளம், சேமிப்பு என ஒட்டுமொத்ததையும் தொலைத்து விட்டாலும், இந்த சீட்டாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி தங்களையே தொலைத்து விட்டு புலம்பி தவிக்கிறார்கள்.
நேரடியாக உட்கார்ந்து விளையாடும் போதே, கார்டுகளை மாற்றி திருட்டுத்தனமாக வெற்றி பெறுகிறார்கள் எனும்போது, ஆன்லைனில் கார்டுகள் மாறப்படாதா என்பதைப்பற்றி யோசிக்காமல் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தவிப்பவர்கள் ஏராளமானவர்கள்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் விளையாடி, இந்த ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழக்கிறார்கள்.
எனவே சட்டப்பூர்வமாகத்தான் நடத்துகிறோம் எனக் கூறி ஆன்லைன் சீட்டாட்டத்தில் சாமானிய மக்களின் அத்தணை பணத்தையும் ஆட்டைய போடும் இந்த சூதாட்ட விளையாட்டுகளுக்கு, மத்திய மாநில அரசுகள் முழுமையான தடை விதிக்க வேண்டும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த சீட்டாட்டங்களை தடை செய்யவும், அதுகுறித்த விளம்பரங்கள் வெளியிட தடை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க தாமதித்தாலும், உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தற்போதைய இக்கட்டான காலகட்டத்தை கருத்தில் கொண்டு, இந்த சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
அரசு செய்ய ஆகும் காலம் வரை ஏமாறாமல் இருக்க உங்கள் வீடுகளில் இருப்பவர்கள் யாராவது ஆன்லைன் ரம்மி போன்ற சீட்டாட்டங்களில் ஈடுபடுகிறார்களா என்பதை கவனியுங்கள். அதை தடுக்காவிட்டால் ஒவ்வொருவர் வீடுகளிலும் பேரிழப்பு நிச்சயம்.