தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சண்முகம் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
பாரதப்பிரதமர் காணொலிக்காட்சி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர்கள் அனைவரும் ஊரடங்கு நீட்டித்தால் தான் கொரோனா கட்டுப்படும் என வலியுறுத்தி உள்ளனர்.
நமது முதல்வரும், வல்லுநர்களின் கருத்தை கேட்டறிந்து, நமது மாநிலத்திலும் 2 வார காலத்துக்காவது நீட்ட வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துரைத்தார். பாரதப்பிரதமர் கருத்துக்களை கேட்டுவிட்டு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
அதன்படி ஆரோக்கிய சேது செயலியை மக்கள் பயன்படுத்த செய்ய வேண்டும், கொரோனா நிலவரங்களை வகைப்படுத்தி பின்பற்ற வேண்டும். என்று அறிவுறுத்தி உள்ளார். இன்று 8 மணிக்கு பிரதமர் உரையாற்ற இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று அமைச்சரவையில் கொரோனா தொற்று, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முதல்வர் கருத்துக்களை அமைச்சரவையில் எடுத்துரைத்தார்.
இது போன்ற ஊரடங்கு ஒரு மாநிலத்தில் மட்டும் செயல்படுத்தினால் பலன் இருக்காது என்ற அடிப்படையில், நாடு தழுவிய முடிவை பாரதப்பிரதமர் அறிவிக்க உள்ள நிலையில் அவர் அறிவிப்பிற்கேற்ப செயல்பட முடிவெடுக்கப்பட்டது.
கடந்த 21 நாட்கள் ஊரடங்குக்கு பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் மற்றும் அனைத்து துறை பணியாளர்கள் செயல்படுவதை எடுத்துரைத்து அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து இருக்கிறார்கள்.
ஆகவே பாரதப்பிரதமர் முடிவினை பின்பற்றி தமிழக அரசு முடிவெடுக்கும்.
கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த அரசு முடிவெடுத்து உள்ளது. அதற்கு போதுமான கிட் நம்மிடம் உள்ளது. 15 ஆயிரம் கிட் இருக்கிறது.
இன்றைய நிலவரப்படி 45050 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதுவரை 9527 பேர் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர். நேற்று வரை 911 நபர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது. இன்று 58 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்து உள்ளது.
இன்று ஈரோட்டில் ஒருவர் இறந்து உள்ளார். அவரையும் சேர்ந்த்து 10 ஆக உயர்ந்து உள்ளது.
கண்டெயின்மெண்ட் ஏரியாவில் 24 லட்சம் குடும்பங்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
பரிசோதனையை வேகப்படுத்தவே ரேபிட் டெஸ்ட் கிட், அது இன்னும் வந்து சேரவில்லை. நமக்கு போதுமான பி.சி.ஆர்., கிட் இருக்கிறது. நமக்கு போதுமான அளவு இருப்பதாக் பரிசோதனைகளை மேற்கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.