30 ஏரியாக்களுக்கு சீல்: பள்ளி, கல்லூரிகள் மருத்துவமனையாக மாற்றம்: திருப்பூர் நிலைமை இதுதான்

திருப்பூர் மாவட்டத்தில் 26 பேருக்கு வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மாவட்டம் முழுவதும் 30 பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.



திருப்பூரில் ஆறு பகுதிகளும் பல்லடத்தில் 2 இடங்களும், அவிநாசி 1 பகுதி, உடுமலையில் 8 இடங்கள் எனவும் மாவட்டத்தில் அதிக பட்சமாக தாராபுரத்தில் 13 பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.



எனினும் அத்தியாவசிய பொருட்கள் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து விநியோகிக்கப்படும் எனவும் துப்புரவு பணிகள் தவறாமல் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மட்டுமே இப்பகுதிகள் அடைக்கப்பட்டுள்ள தால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும்,  தனிமைக்காலம் நிறைவடையும் பட்சத்தில் கொரோனா தொற்று யாருக்கும் இல்லை என உறுதி செய்யப்பட்டால் உடனடியாக முடக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று  திருப்பூர் மாவட்டத்தில் 26 பேருக்கு உறுதியாகியுள்ளது.



மேலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் விதமாக திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் 32 அறைகளில் 150 படுக்கைகளுடன்  கொரோனா சிறப்பு வார்டு அமைக்கும் பணி துவங்கியுள்ளது.


அதே போல உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 150 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள தாலுகா வாரியாக  சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.  



மாவட்டம் முழுவதும் 1156 படுக்கைகள் கொண்ட தற்காலிக சிறப்பு வார்டுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


10.4.20, மாலை 7 மணி வரை
வீட்டின் கீழ் மொத்த மக்கள் #Quarantine-914
70 பேர் இன்று குவாரண்டைனில் இருந்து வெளியே உள்ளனர். அறிகுறிகள் இல்லாமல்! 60 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய கொரோனா பாதிப்பு இல்லை. இதுவரை திருப்பூர் மாவட்ட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள்-26. 1 நோயாளி முழுமையாக குணமடைந்தார். மீதி 25 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 


 


 


 


 


Previous Post Next Post