மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் பக்கவாதநோயால் பாதிக்கப்பட்டு அங்கு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பத்தமடையைச் சேர்ந்த ஒருவரை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்றுதமிழ்நாட்டிற்கு வந்தது.
அவருடன் பத்மடையைச் சேர்ந்த அவரது உறவினர்களான இரு இளைஞர்களும் ஆம்புலன்ஸில் வந்தனர்.
அந்த ஆம்புலன்சை நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மதகநேரியைச் சேர்ந்த டிரைவர் ஓட்டி வந்தார். அந்த ஆம்புலன்ஸில் டிரைவருடன் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த துணை ஒட்டுநர் மற்றும் கிளீனர் ஆகிய இரு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரும் பயணம் செய்துள்ளனர்.
அந்த ஆம்புலன்ஸ் பத்தமடையை வந்தடைந்ததும் நோயாளியையும் அவரோடு பயணம் செய்த இளைஞர்கள் 2 பேரையும் பத்தமடை பகுதியில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் தன்னோடு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவருடன் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
பாட்டி வீட்டில் அன்று இரவு தங்கியதோடு மறுநாள் அக்கம்பக்கத்திலுள்ள நண்பர்களையும் ஆம்புலன்ஸ் டிரைவர் சந்தித்தாக தெரிகிறது.
அந்த ஆம்புலன்ஸ் டிரைவரும் அவரோடு வந்த சக ஊழியர்கள் இருவரும் மறுநாள் மகாராஷ்ட்ராவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் ஆம்புலன்ஸில் வந்த பத்தமடையைச் சேர்ந்த வாலிபர்கள் 2 பேருக்கு கொரானா தொற்று இருப்பது சோதனையில் தெரிய வந்தது.
அவர்கள் உடனே நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து சுகாதாரத்துறையினர் மூலம் ஆம்புலன்ஸ் டிரைவரின் மதகநேரி வீடு காவல்கிணற்றில் அவர் தங்கிய பாட்டி வீடு மற்றும் அவரது நண்பரின் வீடு ஆகிய வீடுகளுக்கு விரைந்து சென்ற மாவட்ட சுகாதார அதிகாரிகள் அந்த வீடுகளில் நோட்டீஸை ஒட்டியதோடு பழவூர் மருத்துவர் ராகினி தலைமையில் மருத்துவகுழுவினர் அந்த வீடுகளை தங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். மேலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும். தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திரும்பிச்சென்ற ஆம்புலன்ஸை கர்நாடகா மாநிலத்தில் அம்மாநில போலீசார் மடக்கி பிடித்து ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் இரு ஊழியர்களையும் மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவர் வந்து தங்கி சென்ற காவல்கிணறு மதகநேரி பகுதி முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் தீயணைப்பு வண்டி மூலம் வீடு வீடாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இப்பணிகளை மேற்பார்வையிட்ட ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை அப்பகுதியில் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு முககவசங்களையும் வழங்கினார். இந்த சம்பவம் வள்ளியூர் வட்டார மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.