திருவண்ணாமலையில் தோட்டக்கலை துறை சார்பில் ரூ.100க்கு 14 வகையான காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும். தேவையின்றி யாரும் வெளியே வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் காய்கறிகள் வாங்க திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் 4 இடத்திலும், செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, கீழ்பென்னாத்தூர் ஆகிய பகுதிகளில் தற்போது தற்காலிக உழவர் சந்தை தொடங்கப்பட்டு உள்ளது. இதில் திருவண்ணாமலையில் 4 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள உழவர் சந்தைகளில் தினமும் அதிக அளவில் மக்கள் கூடுகின்றனர். இந்த கூட்டத்தை குறைப்பாதற்காக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவுரையின்பேரில் திருவண்ணாமலை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் ரூ.100-க்கு தாக்காளி, உருளைக்கிழங்கு உள்பட 14 வகையான காய்கறிகள் அடங்கிய பை விற்பனை தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக உழவர் சந்தை முன்பு நடந்தது. இதனை திருவண்ணாமலை தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சிதம்பரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவி இயக்குனர் குமரவேல், தாசில்தார் கே.அமுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.