தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பது
:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பனை தென்னை ஈச்ச மரங்களில் இருந்து, பதநீர், கள், நீரா இறக்குவது முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இது பேராபத்து என்பதை ஆளும் அரசும், வாழும் மக்களும் உணர வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள தீவு நோரோ. அந்தத் தீவில், "கள்" முக்கியமான உணவாக இருந்து வந்தது. மதுவிலக்கைக் காரணம் காட்டி அங்கே கள் இறக்க தடை விதிக்கப்பட்டது. ஆறுமாத அளவில் அத்தீவில் குழந்தைகள் இறப்பு வெகுவாகக் கூடியது. மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. கள் தடை காரணமாக தாய்ப்பாலுக்கு நிகரான "கள்", இளம் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்காமல் போனதே காரணம் என்று கண்டறியப்பட்டது. அதற்குப் பிறகு அத்தீவில் கள் தடை உடனடியாக நீக்கப்பட்டது. இதைப்பற்றி ஜே.பி.எஸ்.ஹால்டேன், "Tragedy of Nauru” என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் குழந்தைகளையும், முதியவர்களையும் எளிதில் தாக்கக்கூடிய நோய் என்பது கண்டறியப்ப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 47ஐ ஏற்காமல், பனைத்தொழிலை முடக்கியிருப்பது சத்தான உணவு கிடைக்காமல் இருக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடையே ஆகும். 2017 டிசம்பர் அரசு ஆணைப்படி நீரா இறக்குவதற்கு முதல்வரால், முதல் கட்டமாக சென்னையில் தொடங்கி வைத்த மூன்று நிறுவனங்களும் மூடப்பட்டிருப்பது ஒரு அதிர்ச்சித்தகவல். அரசு இவற்றை உணர்ந்து, நோரோ தீவில் கள் தடையை நீக்கி அறிவித்ததைப் போல தமிழ் நாட்டிலும் அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் இன்றைய எதிர்பார்ப்பு. “பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைத்து - குறள் 738" பொருள்: நோயின்மை, செல்வம், விளைபொருள், இன்பம், காவல் ஆகிய ஐந்தும் நாட்டிற்கு அழகு.