தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட உளுந்து பாசி செடிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர் பின்பு பாசி உளுந்து உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி வழங்க கோரி கோஷமிட்டனர். தொடர்ந்து கோட்டாட்சியர் விஜயாவிடம் மனு அளித்தனர். மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2019 ரபி புரட்டாசி பருவத்தில் உளுந்து பாசி, கம்பு, மக்காச்சோளம், கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் விவசாயிகள் பயிரிட்டனர். புரட்டாசி மாதம் முதல் பருவத்திற்கேற்ற மழை பெய்ததால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் செடிகளுக்கு மருந்து தெளித்து, களை எடுத்தனர்.
அறுவடை காலமான கடந்த மார்கழி மாதம் முழுவதும் இடைவிடாத தொடர் மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்து உளுந்து, பாசி கடுமையாக மழையினால் பாதிக்கப்பட்டு முற்றிலும் அதன் விளைச்சலை இழந்தது. இதனால் ஏக்கருக்கு சுமார் 5 முதல் 8 குவிண்டால் வரை கிடைக்கும் என கருதிய விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ஏக்கருக்கு 2 குவிண்டால் மட்டுமே கிடைத்தது.ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து அதிக விளைச்சலை எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தவிர, விளைந்த உளுந்து பாசி பருப்புகளும் தரமின்றி காணப்படுகிறது. இதனால் குவிண்டால் ரூ.2500க்கு மட்டுமே சந்தையில் விலை போகிறது. இந்நிலையில் வேளாளண்மைத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் பயறு வகை சாகுபடி பரப்பு ஆய்வு செய்து, மழையினால் உண்டான பாதிப்பு குறித்து வியசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்தனர். பயறு வகை சாகுபடி செய்த விவசாயிகள் அரசின் இழப்பீடு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வரும் 31.03.2020 அன்று தமிழக சட்டப் பேரவை விவசாய மானிய கோரிக்கை விவாத்தில் உளுந்து பாசி பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க அமைச்சர் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Tags:
மாவட்ட செய்திகள்