கொரோனா குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த கல்வி அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அடிக்கடி காய் கழுவுதல், காய் குட்டையை பயன்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார அறிவுரைகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் இயங்கி வரும் திபாத் குளோபல் பப்ளிக் பள்ளியில் கொரோனா வைரஸ் குறித்த சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் கே.ராஜா தலைமை தாங்கினார். கண்காட்சியை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்து பார்வையிட்டார். கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாத்து கொள்வது குறித்து பல்வேறு வழிமுறைகள் குறித்த விளக்க படங்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. மாணவ-மாணவியர்களிடம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உள்ளதா என்பதை கலெக்டர் கேட்டறிந்தார். பிறகு பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவர் பள்ளிகள் என்பது கல்வி போதிக்க மட்டும் அல்ல. அவைகள் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கக் கூடிய தொழிற்கூடம். இம் மாவட்டத்தில் பெண் சிசு கொலை அதிகம் உள்ளது. பெண்களுக்கு சமமான மரியாதையை கொடுப்பது இல்லை. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டாலே போதுமாகி விடாது. வாழ்க்கை, கலாச்சாரம், குடும்ப பழக்க வழக்கங்களை பள்ளியில் சொல்லித்தர மாட்டார்கள். அதை பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சொற்பொழிவாளர் சுகிசிவம் கலந்து கொண்டு பேசுகையில் அறிவாளிகளாக இல்லாவிட்டாலும், நோயாளியாக இருக்க கூடாது. இதை புரிந்து கொண்டு மாணவர்கள் விளையாட்டிலும் கவனத்தை செலுத்த வேண்டும் என்றார். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ-மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கொரோனா வைரஸ் குறித்த நாடகமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. விழாவில் பள்ளியின் துணைத் தலைவர் சுனந்தா ராஜா மற்றும் பெற்றோர்கள், பள்ளி மாணவ-மாணவியர்கள், பொது மக்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் பள்ளியின் முதல்வர் ஆர்.சித்ரகலா வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் பிரியா கருணாநிதி நன்றி கூறினார்.