தும்மல், இருமல் வந்தாலே அச்சமா? கொரோனா அறிகுறியை அறிவது எப்படி? இந்த செய்தி தொகுப்பு, வீடியோவில் விளக்கமாக பார்க்கலாம்.
வீடியோ விளக்கம்:
சளி, இருமல் வந்து விட்டாலே கொரோனா வந்து விட்டதோ என்று அஞ்சாதீர்கள்.
இப்போதைக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 3&ஆம் நிலையை அடையவில்லை.
எளிமையாக சொன்னால் எல்லா வீதிகளுக்கும், எல்லா பொதுமக்களுக்கும் வந்து சேரவில்லை, கொரோனா இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது. அதாவது, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு உள்ள சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா உங்கள் வீதிக்கும், உங்கள் வீடுகளுக்குள்ளும் வந்து விடக்கூடாது என்று தான் தமிழக அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த விழிப்புணர்வு செய்திகளோடு பல வதந்திகளும் பரவி உங்களை அச்சமூட்டலாம்.
இதனால் சளி, இருமல் வந்த பலர் கொரோனா வந்து விட்டதோ என்று அஞ்ச வேண்டாம். தும்மல், சளி, தலைவலி இருப்பவர்கள் எல்லாம் கொரோனா வந்து விட்டதோ என்று எண்ணி அஞ்ச வேண்டாம்; அது உங்களுக்கு இருக்கும் சாதாரண சளியாக இருக்கலாம்.
வறட்டு இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய இரண்டும் தான் கொரோனாவின் அறிகுறிகள். வறட்டு இருமல் என்பது இருமும்போது சளியே இல்லாமல் வரும் கடினமான இருமல். அதனுடன் கடுமையான காய்ச்சலும் இருந்தால் ஒருவேளை கொரோனா தொற்றாக இருக்கலாம்.
இந்த அறிகுறி மோசமாக இருந்தால் பயப்படாமல் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். கொரோனா தொற்றுக்கு என்று மருந்து இல்லாத போதும் அது குணப்படுத்தப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அதனால் நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அதே நேரம் பிறரிடமிருந்து விலகி இருங்கள்; அடிக்கடி கை கழுவுங்கள், மாஸ்க் உபயோகியுங்கள். உலகளாவிய தொற்றுநோயான கொரோனா நம்மையும், நம்மை சார்ந்தோரையும் பாதிக்காமல் கடந்து செல்ல வேண்டிய நேரம் இது.