திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் மருந்து தெளிக்கும் பணி





திருப்பூர், திருமுருகன்பூண்டி முதல்நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.  7 வது வார்டில் உள்ள நெசவாளர் காலனி 2 வது வீதியில் வசித்து வருபவர் மாரப்பன் (வயது 80). நெசவு தொழிலாளி. இவருக்கு கடந்த ஒரு வாரமாக கடுமையான இருமல் மற்றும் சளி பிடித்து அவதிபட்டு வந்தார். மருத்துவமனைக்கு சென்றும் குணமாகவில்லை. தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்ததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பூண்டி பேரூராட்சிக்கு தகவல் கொடுத்தனர்.

               இதைத்தொடர்ந்து செயல்அலுவலர் குணசேகரன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்பரமன் தலைமையில் தூய்மை தொழிலாளர்கள் குழுவினர் விஷேச உடையுடன் அவரை பரிசோதிக்க வந்தனர். ஆனால் அதற்குள் அவரது மகன் அவரை  மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்து மாத்திரைகளை வாங்கி வந்தார். விசாரணையில் அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்று தெரியவந்தது. 


                பின்னர் அந்த குழுவினர் அவரது வீட்டிற்கு கோரோனோ தடுப்பு கிருமி நாசினி மருந்து அடித்தனர். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி அடிக்கப்பட்டது. மேலும் பூண்டி போலீஸ் நிலையம், கோவில்கள், மசூதி மற்றும் பொதுமக்கள் அதிகமாக  கூடும் இடங்களிலும் மருந்து அடிக்கப்பட்டது.  அதேபோல் தேவராயம்பாளையம் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல், கோவில், உள்பட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு மருந்து அடிக்கப்பட்டது. 

                இதுகுறித்து பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது :- நெசவாளர் காலனி பகுதியில் இருந்து வயதானவர் ஒருவர் தொடர்ந்து தும்மிக்கொண்டே இருப்பதாகக் தகவல் கொடுத்தனர் . இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். அதில் அவருக்கு கோரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. இருந்தாலும் அவரது வீடு முழுவதும் தடுப்பு மருந்து அடித்தோம். அதேபோல் அப்பகுதி முழுவதும் எல்லா வீதிகளிலும் தடுப்பு மருந்து அடித்துள்ளோம். மேலும் பேரூராட்சியில் உள்ள அணைத்து வார்டுகளிலும் மருந்து அடிக்க உள்ளோம். நோய்க்கான அறிகுறி இருந்தாலே தகவல் கொடுத்தால் அந்த வீட்டை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.


 

 



 



 

Previous Post Next Post