பெண்கள் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு தொழிற்கல்வி அவசியம் மக்கள் கல்வி நிறுவன சான்றிதழ் வழங்கும் விழாவில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா பேச்சு.
விருதுநகர் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனத்தின் சார்பில் "சர்வதேச பெண்கள் தின விழா" மற்றும் மக்கள் கல்வி நிறுவனத்தின் வாயிலாக 2019-2020ம் ஆண்டு தொழிற்கல்வி பயின்ற 732 பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா திருத்தங்கல்லில் நடைபெற்றது. விழாவிற்கு மாதா அமிர்தானந்தமயி மடத்தின் மூத்த துறவி சுவாமிஜி.இராமகிருஷ்ணானந்த புரி அவர்கள் தலைமை வகித்தார். முத்துமாரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் தொழிலதிபருமான கணேசன் முன்னிலை வகித்தார். மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் விஜயலட்சுமி வரவேற்புரை வழங்கினார். திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பெண்கள் தின விழா சிறப்புரை வழங்கி மக்கள் கல்வி நிறுவனத்தின் மூலம் தொழிற்பயிற்சிகள் பெற்ற 732 பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
அவர் பேசும்போது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களின் படிப்பு, குறிப்பாக கிராமப்புற பெண்களின் படிப்பு ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அம்மாவின் ஆட்சியில் கிராமம் தோறும் பள்ளிகள் திறக்கப்பட்டு, பெண்களுக்கான கல்வி வசதியை ஏற்படுத்தி, பெண்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தித் தந்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள். அதுமட்டுமில்லாமல் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்க்காக சுய உதவி குழு போன்ற பல திட்டங்களை வடிவமைத்து அதனை திறம்பட செயல் படுத்திய பெருமை, புகழ் அனைத்தும் மாண்புமிகு புரட்சித் தலைவியையே சாரும். அதுபோல் மக்கள் கல்வி நிறுவனமும், விருதுநகர் மாவட்டம் முழுவதும் பெண்களின் பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு பெறுவதற்காக பல்வேறு விதமான வேலை வாய்ப்பிற்கான தொழிற்பயிற்சியை வழங்கி வருவது பெண்களாகிய நமக்கெல்லாம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகம் விரும்பக் கூடிய தையல்கலை, அழகுக்கலை, எம்ப்ராய்டரி போன்ற பயிற்சிகளும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சணல் பைகள், பாக்குமட்டை தட்டுகள் போன்ற துறைகளில் பயிற்சி அளித்து பெண்களை வருமானம் ஈட்ட செய்திருப்பது மக்கள் கல்வி நிறுவனத்தின் சாதனைகளாகும். மேலும் அவர் பேசும்போது இங்கு கூடியுள்ள இத்தனை பெண்களும் மக்கள் கல்வி நிறுவனத்தின் மூலம் தொழிற் பயிற்சி பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதற்குச் சான்றாக இன்று இங்கு என்னால் மக்கள் கல்வி நிறுவனத்தில் பயின்ற பயனாளிகளின் வெற்றிக்கதைகள் அடங்கிய குறுந்தகட்டினை இந்த மகளிர் தின விழாவில் வெளியீடு செய்திருப்பது மிகவும் சிறப்பானதாகும் என விழா சிறப்புரையில் கூறினார்.
முன்னதாக பெண்கள் தயாரித்த பேப்பர் பூ மற்றும் சணல் பைகள் ஆகிய கண்காட்சியை திறந்து வைத்தார். விழாவில் திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் S.ஜெயந்தி, முத்துமாரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் பால்பாண்டிதாய் , மக்கள் கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் முத்தையா, சுவாமி விவேகானந்தர் வர்த்தகர் சங்கத்தின் உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் திட்ட அலுவலர் கிருஷ்ணசாமி விழா தொகுப்புரை நிகழ்த்தினார். இறுதியில் மக்கள் கல்வி நிறுவனத்தின் பயிற்றுனர் மாரியம்மாள் நன்றி கூறினார். விழாவில் மக்கள் கல்வி நிறுவனத்தின் பயனாளிகள் நடத்திய கலைநிகழ்ச்சிகளும், அவர்கள் தொழிற்பயிற்சியில் பெற்ற அனுபவங்களின் கருத்துரைகளும் இடம்பெற்றன. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மக்கள் கல்வி நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்கள் தலைமையில் அலுவலர்கள், பயிற்றுநர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் மக்கள் கல்வி நிறுவனத்தின் பயனாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Tags:
மாவட்ட செய்திகள்