தேவகோட்டை - சிவகங்கை மாட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் காய்கறித் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்.விளையும் காய்கறிகளை பள்ளி சத்துணவுக்கு வழங்கி வருகின்றனர்.
இப்பள்ளி மாணவர்களிடம் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும்,பயிர்சாகுபடி மற்றும் தோட்டப் பயிர்கள் வளர்க்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பள்ளி வளாகத்தில் காய்கறித் தோட்டம்அமைக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டை அரசு தோட்டக்கலைப்பண்ணை,விவசாய கல்லூரி போன்ற இடங்களுக்கு களப்பயணம் மேற்கொண்டு விவசாயம் தொடர்பாக கற்றுக்கொண்ட விசயங்களை பயன்படுத்தி மாணவர்கள் காய்கறி செடிகளை வளர்த்து வருகின்றனர். பள்ளிகளில் வளரும் செடிகளை மாணவர்களே ஆர்வத்துடன் கொண்டுவந்து தங்கள் செடி என்ற பாசத்துடன் வளர்த்து வருகின்றனர்.பள்ளியின்தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மேற்பார்வையில் தோட்டக்கலை விவசாய ஆர்வலர் குழுஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளர்களாக ஆசிரியர்கள் செல்வமீனாள் , கருப்பையா ,ஸ்ரீதர் ஆகியோர் செயல்படுகின்றனர். .
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது:அழிந்து வரும் விவசாயத்தைப் பாதுகாக்கவும், இளைய தலைமுறையினருக்கு விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் இக்குழு தொடங்கப்பட்டுள்ளது. இதில்6, 7, 8-ம் வகுப்புகளைச் சேர்ந்த50 மாணவ, மாணவிகள் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். பள்ளிவளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறித் தோட்டம் மாணவர்களால் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கத்தரி, தக்காளி ,வெண்டைக்காய்,பச்சைமிளகாய்,பாகற்காய் ஆகியவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து வளர்த்து எதிர்பார்த்த அளவில் காய்கறிகளும் கிடைத்துள்ளது.
பள்ளியில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் அனைத்தும் சத்துணவுக்காகப் பள்ளிக்கே வழங்கி விடுவோம். மாணவ, மாணவிகள் தினமும்குழுக்களாகப் பிரிந்து செடி, கொடிகளை பாரமரிக்க பயிற்சி அளித்து வருகிறோம். இதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். இந்த தோட்டத்தை பார்வையிட்ட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் மாணவ, மாணவிகளைப் பாராட்டினார்.செடிகளை வளர்ப்பதில் மாணவர்கள் காட்டும் ஆர்வம் பிற்காலத்தில் நல்ல வேளாண்மை வல்லுநர்களாக உருவாவார்கள் என்பது உறுதி.கடந்த ஆறு வருடங்களாக தொடர்ந்து தேவகோட்டை அரசு தோட்டக்கலை பண்ணை மற்றும் சேது பாஸ்கரா விவசாய கல்லூரிக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்து சென்று வாழ்க்கைக்கான கல்வியாகிய விவசாயம் தொடர்பாக கற்றுக்கொடுத்ததன் பலனாக மாணவர்கள் அவரவர் வீடுகளில் இருந்து செடிகளை,விதைகளை கொண்டு வந்து தங்கள் செடி என்கிற பாசத்துடன் சிறந்த முறையில் காய்கறி செடிகளை வளர்த்து வருகின்றனர். பள்ளி விடுமுறை நாள்களில் ஆசிரியர்களே செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி இயற்கை உரம் இட்டு வளர்த்து வருகின்றனர் என்று கூறினார்.