சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தை ஒட்டி 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஈஸ்வரன் கோவில் உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக,150 அடி நீளமுள்ள தென்புற சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதற்காக தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் 63 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தது. இரண்டாயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி, மேலும் கட்டிடங்கள் இடியாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தரை தளத்தில் இருந்து 100 அடி ஆழத்தில், பவானி ஆற்றில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வாரத்தில் மணல் மூட்டைகளை அப்புறப்படுத்தி விட்டு , கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தது. இன்று காலை 6.30 மணி அளவில் கோவில் அர்ச்சகர் சிவன்மூர்த்தி அய்யர், கோவில் நடையை திறந்த போது, திடீரென தென்புறத்தில் உள்ள சுற்றுச்சுவர் பயங்கர சத்தத்துடன், சீட்டுக்கட்டு சரிவது போல் இடிந்து விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கோவில் வளாகத்தில் இருந்த பழமை வாய்ந்த 63 நாயன்மார்கள் சிலைகளும் இடிபாடுகளுக்குள் விழுந்து நொறுங்கியது. அதிர்ச்சி அடைந்த பக்தர்களும், கோவில் அர்ச்சகரும் தப்பித்து ஓடினர். அதிகாலையில் கோவில் இடிந்து விழுந்த சம்பவம், பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது. கட்டிட பணியை மேற்கொண்ட பொறியாளர்களின் கவனக்குறைவால் தான் கோவில் இடிந்து விழுந்ததாகவும், இனி கோவில் கட்ட பல லட்சங்கள் செலவாகும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.