வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த 3 பேர் மீது வழக்கு



   
வெளிநாட்டில் இருந்து சென்னை வந்தவர்களில் தமிழக அரசின் உத்தரவை மீறி வெளியில் சுற்றியதாக 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசுடன் இணைந்து போலீசாரும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொருட்படுத்தாமல் வெளியில் சுற்றுபவர்களை பிடித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


கோயம்பேடு சீமாத்தம்மன் நகர் இரண்டாவது செக்டார் பகுதியைச் சேர்ந்தவர் தவீப் நூர் முகமது. 27 வயதான இவர் தனது தந்தை சாதிக் (வயது 62) குடன் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சென்னை திரும்பினார்.


கோயம்பேட்டில் உள்ள வீட்டில் தங்கியிருந்த இருவரும் இதுபற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. இதனால் இருவர்மீதும் 188, 269, 270, 221 மற்றும் பேரிடர் வழக்கு 51பி ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில் சீனாவில் இருந்து வந்தவர் மீதும் அரசு உத்தரவை மீறி வெளியில் சுற்றியதாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


சென்னை அண்ணா நகர் இரண்டாவது பிரதான சாலையில் வசித்து வந்தவர் லட்சுமணன் அருண். சீனாவில் இருந்து திரும்பிய இவர் நோய் பரவாமல் தனித்து இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது.


இதை மீறி வெளியே சென்றதால் அவர் மீது ஐ.பி.சி சட்ட பிரிவுகள் 188, 269, 270 மற்றும் பிரிவு 3. நோய் பரவல் தடுப்பு சட்டம் மற்றும் பேரிடர் சட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது


Previous Post Next Post