திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியம், மீசநல்லூர் கிராம ஊராட்சியில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், உட்பட பல்வேறு துறைகளின் மூலமாக ரூ.6.61 கோடி மதிப்பீட்டில் 100 இருளர் குடும்பங்களுக்கான புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, செய்யாறு கோட்டாட்சியர் கே.விமலா, திட்ட அலுவலர் பழங்குடியினர் நலன் இளங்கோவன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனந்த்மோகன், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி, அரசு அலுவலர்கள், வீடுகளை பெறும் இருளர் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
தெள்ளார் ஊராட்சி ஒன்றியம், மீசநல்லூர் கிராமத்தில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திக் கீழ் 2015-2016 ஆம் ஆண்டு ரூ.1.44 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக 2017-2018 ஆம் ஆண்டு மூலதன மான்ய நிதி திட்டம், 2018-2019 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.32 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் 43 இருளர் குடும்பங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய வீடுகள் முதல் கட்டமாக 13.10.2018 அன்று ஒப்படைக்கப்பட்டது. தற்போது, மீசநல்லூர் கிராமத்தில் பழங்குடியினர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் மாவட்ட மினரல் ஃபவுண்டேஷன் நிதி, மாவட்ட தொழில் மையம், கால்நடை பராமரிப்புத் துறை, ஆகிய துறைகளின் கீழ் ரூ.6.61 கோடி மதிப்பீட்டில் 100 இருளர் குடும்பங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் 2வது கட்டமாக புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மீசநல்லூர் கிராமத்தில் 49 விறகு வெட்டும் தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. மேலும் தாலுக்கா முழுவதும் வீட்டில்லாத விறகுவெட்டும் தொழிலாளர்களுக்கு 100 வீடுகள் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக இப்பகுதியையட்டியவாறு உள்ள காலியிடத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் செங்கல் சூளை, அடுப்பு கரி தயாரித்தல் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணிகளை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார். அப்போது பகல் உணவு அங்குள்ள 200 விறகு வெட்டும் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். பின்னர் அவர்களுடன் வரிசையில் நின்று உணவு வாங்கி தொழிலாளர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.