திருப்பூர் மாவட்டத்தில் போலீசார் முழுமையாக ஊரடங்கை அமல்படுத்தி உள்ளனர். ஊரடங்கின் இரண்டாவது நாளான இன்று திருப்பூரில் பெரும் அமைதி நிலவுகிறது.
ஊரடங்கை மீறி சுற்றிய 83 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மாவட்டத்தில் 26 மோட்டார் சைக்கிள்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
முக்கிய சாலைகள் முழுமையாக போக்குவரத்து இல்லாமல் போன நிலையில் வீதிகளில், காய்கறிகள் வாங்கவும், மெடிக்கல் வாங்கவும் சிலர் இரு சக்கர வாகனங்களில் சென்றதை காண முடிந்தது.
அவ்வாறு சுற்ரியவர்களை போலீசார் பிடித்து அறிவுரை கூறி அனுப்பினர். திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க பொதுமக்கள் வரவில்லை.
நேற்றைய கூட்டம் கூட இல்லாததால், காய்கறி வியாபாரிகள் வெறுமனே காத்து கிடக்கும் நிலை ஏற்ப்பட்டது.
மேலும் மீன், இறைச்சிக்கடைகளிலும் ஆட்கள் இல்லாததால், வியாபாரிகள் விற்பனை இன்றி கவலைப்பட்டனர். ஒரிருவர் இறைச்சி, மீன் வாங்கி சென்றனர்.
மளிகைக் கடைகள் ஓரளவு திறந்து இருந்தன. பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஜம்மனை வீதி, சிட்கோ செல்லும் பிரிந்தாவன் ஓட்டல் பகுதிகளில் ஓரிரு ஓட்டல்கள் செயல்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மற்ரும் அங்கு வந்த ஓரிருவருக்கு மாநகராட்சி செவிலியர் ஒருவர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டார்.
சாலையோரம் வசிப்பவர்களுக்கு இது போதாத காலம், பெருமாள் கோவில் பகுதியில் விரக்தியுடன் அமர்ந்திருந்த பொதுமக்கள்.
பாவா மெடிக்கலில் மருந்து வாங்க மாநகராட்சியை ஒட்டி பொதுமக்கள் காத்திருந்தனர்.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒருவர் கூட இல்லை. இருக்கைகள் வெறுமனே இருந்தது.
தேநீர் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. போலீசார் மாஸ்க் அணியாமல் வந்தவர்களை விரட்டி துரத்தினர். சில பகுதிகளில் தோப்புக்கரணம் போட வைத்து அனுப்பினர்.
மொத்தத்தில் திருப்பூர் நேற்றைய நாளை விட இன்று அமைதியாக இருந்தது. மெயின் ரோடுகளில் முழுமையாக கட்டுப்படுத்தி விட்ட நிலையில் வீதிகளிலும், சந்துகளிலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றித்திரியும் பகுதிகளையும், கூட்டம் சேர்ந்து அரட்டையடிக்கும் இடங்களையும் கண்டறிந்து போலீசார் கட்டுப்படுத்தினால், ஊரடங்கின் நோக்கம் முழுமையாக நிறைவேறும்.
Tags:
மாவட்ட செய்திகள்