ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சம்மன் இன்னும் வரவில்லை- ரஜினி
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தின் முன் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ‘’தேசிய மக்கள் பதிவேடு அவசியம்’’ என்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் இருப்பவர்களில் யார் யார் வெளி நாட்டவர்கள் என்ற கணக்கெடுப்பிற்காக சி.ஏ.ஏ அவசியம். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விளக்கத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. சி.ஏ.ஏ.வால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
இந்த விவகாரத்தில் மாணவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ள பார்ப்பார்கள். ஆகவே, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் முன்பாக ஆலோசித்து ஈடுபட வேண்டும்’’ என்றும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்றும், சி.ஏ.ஏ.வால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு என்ற தவறான தகவல் பரப்பப்பப்படுகிறது. இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றினால் முதல் ஆளாக எதிர்ப்பேன் ரஜினிகாந்த் என்றும் தெரிவித்தார்.
மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் எனக்கு சம்மன் அனுப்பினால் விளக்கம் அளிப்பேன். அது தொடர்பான சம்மன் எனக்கு இன்னும் வரவில்லை. நான் சரியாக வருமான வரி செலுத்துபவன். சட்ட விரோதமாக எந்த செயலும் செய்ய வில்லை எனவும் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.