களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியிலிருந்த சிறப்பு எஸ்.ஐ., வில்சனை துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கு தொடர்பான ஆவணங்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று தமிழகத்தின் பல இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ வில்சன், கடந்த ஜனவரி 8-ம் தேதி இரவு 9.30 மணிக்கு களியக்காவிளை அருகிலுள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மர்ம கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அப்துல் சமீம், தெளஃபீக் ஆகியோரை ஜனவரி 14-ம் தேதி தனிப்படை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.. இவ்வழக்கு தொடர்பாக இருவரையும் பல பகுதிகளில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.
வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்கள், தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததால், இருவர் மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கை என்.ஐ.ஏவுக்கு மாற்ற அனுமதிகேட்டு தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அனுமதி அளிக்கப்பட்டதன் பேரில், என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் என்.ஐ.ஏ பிரிவு அதிகாரிகளிடம், இவ்வழக்கு தொடர்பான ஆவணைங்களை போலீஸார் சமர்ப்பித்தனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தெளஃபீக்கின் நண்பரான செய்யது அலிநவாஸ் என்பவரின் இரண்டாவது மனைவி மொய்தீன் பாத்திமாவின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தெளஃபீக், சமீம் உள்ளிட்ட 6 பேர் இங்கு தங்கிவிட்டுச் சென்றதாக கிடைத்த தகவலின்படி, ஏற்கெனவே கடந்த ஜனவரி 26-ம் தேதி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் 3 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை சுமார் 6 மணி முதல் இரண்டு மணி நேரம் பாத்திமாவின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில், மூன்று சிம்கார்டு அட்டைகள், வங்கியில் பண பரிவர்த்தனை மேற்கொண்டதற்கான ரசீதுகள், மொய்தீன் பாத்திமாவின் முதல் கணவரான சாசுதினின் புகைப்படம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இச்சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.