குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அமைந்துள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகையினை கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறும் வகையில், நமது மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2016-17 முதல் 2017-18 வரை 13 வட்டாரங்களுக்குட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் ஊராட்சிக்கு 1 வீதம் ரூ.1.00 இலட்சம் மதிப்பீட்டில் 265 கொட்டகைகள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. மண்புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையில் கிடைக்கும் விவசாயக்கழிவுப் பொருட்களான சாணம், இலை, தழை காய்கறிகழிவுகள் போன்றவற்றை உட்கொண்டு எச்சங்களை சிறு சிறு உருண்டைகளாக மண்புழுக்கள் வெளியேற்றுவதே மண்புழு உரம் ஆகும்.மேலும், இத்தகைய மண்புழு உரத்தால் மண்ணின் நீர்பிடிப்புசக்தி, காற்றோட்டம், வடிகால்வசதியை அதிகரிக்கிறது. மழைக்காலங்களில் மண்ணரிப்பை தடுப்பதோடு, மண்ணை வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
இதனால் சத்துக்களை எடுக்கும் புது வேர்கள் உருவாக வாய்ப்பளிக்கிறது. மண்புழு உரத்தை மண்ணில் இடுவதால் மண்வளம் இயற்கையாக பாதுகாக்கப்பட்டு, பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. இவ்வுரம் விவசாய வளர்ச்சியில் மிகவும் உறுதுணையாக இருப்பதால் விவசாயிகளிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் வேலையில்லாத இளைஞர்களையும், பெண்களையும் இணைத்து கூட்டுறவு சங்கங்கள் அமைத்து மண்புழு உரம் தயார் செய்யப்பட்டு, ஒரு கிலோ. ரூ.10. க்கு விலை நிர்ணயம் செய்து கிராம விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மண்புழு உரங்களை பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கிறது. மேலும் மண்வளம் காக்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பெற்றுக்கொண்டு வேளாண்மையினை பெருக்கி பயன்பெற வேண்டுமென கலெக்டர் தெரிவித்தார்.
தொடர்ந்து குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளையும், கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன் சங்கர் ராஜ், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.