குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு :
நெல்லையில் முற்றுகை பாேராட்டம்
நெல்லை பிப் 20
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
மத்திய அரசின் குடியுரிமைத் திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், கடையநல்லூர், ஏர்வாடி, பொட்டல்புதூர் உள்பட பல இடங்களில் பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன.
இந்த நிலையில், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதற்காக திருநெல்வேலி வண்ணார்பேட்டை முதல் கொக்கிரகுளம் வரையிலான அண்ணா சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
மேலப் பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.