சென்னை காவல்துறையை கண்டித்து தென்காசி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

சென்னை காவல்துறையை கண்டித்து தென்காசி கலெக்டர் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டனர்.



சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் அமைப்பினர் நடத்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தென்காசியில் முஸ்லீம் அமைப்பினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


சென்னையில் முஸ்லிம் அமைப்பினர் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டிக்கும் வகையில் இரவில் தென்காசியில் முஸ்லீம் அமைப்பினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250  நபர்கள் மீது தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இந்நிலையில் தென்காசி ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சென்னையில் முஸ்லிம் அமைப்பினர் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து கோஷமிட்டனர்.


இந்த முற்றுகை போராட்டத்தில் தென்காசி பகுதி இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் ஏராளமான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் பெண்கள் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை மீது தமிழக முதலமைச்சர் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, மற்றும்  என்.பி.ஆர் ஆகியவற்றை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.


தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது. இதைப் போலவே தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், கடையநல்லூர், புளியங்குடி  ஆகிய பகுதிகளிலும் சென்னை தடியடி சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Previous Post Next Post