போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க புதிய செல்போன் செயலி வடிவமைப்பு
தென்காசி எஸ்.பி., அதிரடி நடவடிக்கை
போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க புதிய செல்போன் செயலியை தென்காசி மாவட்ட எஸ்.பி., சுகுணாசிங் அறிமுகம் செய்துள்ளார்.
சாலை போக்குவரத்து விதிமீறல்கள் காரணமாக தினமும் பல விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதில் பலர் உயிர் இழக்கின்றனர். பலர் படுகாயமடைகின்றனர். சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை ஓட்டிச் சென்றாலே பெரும்பான்மையான விபத்துக்களை தடுத்து விடலாம். இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்வோரை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு நடவடிக்கை எடுக்கும் போது காவல்துறையினருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பல இடங்களில் தகராறு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.
போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வசதியாக தென்காசி மாவட்ட எஸ்.பி.,சுகுணாசிங் புதிய செல்போன் செயலியை உருவாக்கியுள்ளார். தென்காசி டிஸ்ட்ரிக்ட் டிராபிக் போலீஸ் (டி.டி.டி.பி) என்ற செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலி முறை குறித்து தென்காசி மாவட்ட எஸ்.பி.,சுகுணாசிங் கூறியதாவது:
சுhலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கும் போது சில நேரங்களில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்கும் வகையிலும், போக்குவரத்து விதிமீறல்களை தகுந்த ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்பிப்பதற்காகவும் தென்காசி டிஸ்;ட்டிரிக்ட் டிராபிக் போலீஸ் என்ற பெயரில் செல்போனில் புதிதாக செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இச்செயலியை இயக்கும் போது 8 வினாடிகள் வீடியோ பதிவாகும். அதில் போக்குவரத்து விதிமீறல்களை படமாக்கிக் கொள்ளலாம். அதாவது போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை வாகன எண்ணுடன் சேர்த்து படமாக்கிக் கொள்ளலாம்.
இச்செயலி மூலம் எடுக்கப்படும் வீடியோ சம்பந்தப்பட்ட காவல்நிலைய கம்ப்யூட்டரில் பதிவாகும். இதனை ஆய்வு செய்து குறிப்பிட்ட வாகன ஓட்டி என்ன போக்குவரத்து விதிமீறல்கள் செய்துள்ளார் என்பதை குறிப்பிட்டு வாகன உரிமையாளருக்கு இ-செல்லான் அனுப்பி வைக்கப்படும். வாகன உரிமையாளர் அந்த இ-செல்லானை கோர்ட்டில் சமர்பித்து அதற்கான அபராதத் தொகையை செலுத்த வேண்டும். இதுகுறித்து நீதிமன்றத்திற்கும் காவல்துறை சார்பில் முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டு விடும். இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணியாவிட்டாலும், இரண்டு பேருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் சென்றாலும், அதிக வேகத்தில் சென்றாலும், இதர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணியாவிட்டாலும், சீருடை அணியாவிட்டாலும், அதிக பாரம் ஏற்றிச் சென்றாலும் விதிமீறல்கள் ஆகும்.
புதிய செயலி காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், போலீஸ் நண்பர்கள் குழுவினர், கல்லூரி பேராசிரியர்கள் உட்பட முக்கியமானவர்களின் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்படும். தென்காசி மாவட்ட பகுதியில் இச்செயலி முறை செயல்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகள் நிறைவடைய 10 நாட்கள் ஆகலாம். தற்போது கடையநல்லூர் பகுதியில் புதிய செயலியை பயன்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் பணி ஆய்வு முறையில் துவங்கியுள்ளது. விரைவில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இப்பணி துவங்கிவிடும். இவ்வாறு எஸ்.பி.,கூறினார்.