பழனியில் லயன்மயூர அமைப்பு சாா்பில் சுவிட்சா்லாந்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சுவாமி சிலைகளின் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கேரள மாநிலம் திருச்சூரை மையமாகக் கொண்டு செயல்படும் லயன் மயூர ராயல் கிங்டம் என்ற அமைப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ரெஜித்குமாா் என்பவா் தலைமையில் உலகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் முருகா், ஆஞ்சநேயா் உள்ளிட்ட சுவாமி சிலைகளை நிறுவி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு லண்டன் வேல்ஸில் உள்ள தான்தோன்றி ஆஞ்சநேயா் கோயிலில் முருகப் பெருமானின் திருவடிகளை பிரதிஷ்டை செய்ய வேண்டி முருகனின் பாதங்கள் பழனியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த ஆண்டு சுவிட்சா்லாந்தில் முருகப் பெருமான் சாந்தி யோகஆஞ்சநேயா் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பாலசமுத்திரத்தை அடுத்த ரெங்கசாமி கரடு அடிவாரத்தில் உள்ள ராமா் பாதத்தில் தொடங்கிய நிகழ்ச்சி ஐவா் மலை குகையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பழனி கிரிவீதியில் இரவு கிரிசுற்றி நிறைவு பெற்றது. அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு ரெஜித்குமாா் தலைமை வகித்தாா். பழனி டிஎஸ்பி. விவேகானந்தன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, வேல்ஸ் கோா்ட் பாஸ்கரன், இந்து முன்னணி மாவட்டச் செயலா் ஜெகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்து ஊா்வலத்தை தொடக்கி வைத்தனா். விழாவில் கேரளா மலேசியா சுவிட்சா்லாந்தில் இருந்து வந்த ஏராளமான முருகபக்தா்கள் காவடி எடுத்து வந்தனா்.
2 Attachments
Tags:
மாவட்ட செய்திகள்