குடித்து விட்டு வாகனம் ஓட்டிய வழக்கு: ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட முடியாமல் சிறை சென்ற தொழிலாளி

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய கூலித்தொழிலாளி ஒருவர் 2 வார சிறை தண்டனையை ஏற்ற சம்பவம் சற்று பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்த சாமிநாதன் (54). கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர் கடந்தாண்டு நவம்பர் 8 ஆம் தேதி குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்ததாக கூறப்பட்டது. சிங்காநல்லூர் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது உறுதியாகி விடும் என்ற நிலையில் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.

வழக்கினை நடத்துவதற்கு இவர் சரியாக வரவில்லை.  எனவே நீதிமன்றம் மூலம் கடந்த மாதம் 29 ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, போலீசார்   சாமிநாதனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சாமிநாதனுக்கு, ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் 2 வார சிறை தண்டனை விதித்து கோவை 8வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், கூலி வேலைக்கு செல்லும் சாமிநாதன் ரூ.10,000 அபராதத்தை தன்னால் கட்ட முடியாது என்றும், 2 வார சிறையை ஏற்பதாக கூறினார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் சாமிநாதன் அடைக்கப்பட்டார்.

Previous Post Next Post