இம்பார்ட் ஆய்வறிக்கை தயாரிப்பில் திருப்பூர் அரசு பள்ளிகள் அசத்தல் !

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் இடைற்றலை தடுக்கவும்,  மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், இம்பார்ட் எனும் சிறப்பு செயல்திட்டம் செயல்படுத்தப்படடு வருகிறது.  ஒவ்வொரு பள்ளியிலும்  9 ம் வகுப்பு மாணவர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என  பாடவாரியாக ஐந்து குழுக்கள்  உருவாக்கப்படும். ஒரு குழுவில் நன்கு படிக்கும் ஒரு மாணவன்,  நடுத்தரமாக படிக்கும் ஒரு மாணவன் மற்றும் பாடத்தில் பின்தங்கியுள்ள  மூன்று மாணவர்கள் என 5 மாணவர்கள் இருப்பர் .


                 குழுவுக்கு பள்ளியின் ஆசிரியர் ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார். இக்குழுவுக்கு ஒரு பயனுள்ள தலைப்பு ஒன்று வழங்கப்பட்டு அக்குழுவானது வகுப்பறைக்கு வெளியே சம்மந்தப்பட்ட  இடங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள நடவடிக்கைகளை அறிந்து அறிக்கை ஒன்றை தயார் செய்ய வேண்டும். முதலில் திருப்பூர் ஒன்றிய அளவில் நடந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த திருப்பூர் மாவட்ட  அளவிலான ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  இதில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளின் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது . தமிழ் பாடத்தில் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ள்ளி, ஆங்கிலத்தில் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கணிதத்தில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி, அறிவியலில் பூளவாடி,அரசு மேல்நிலைப்பள்ளி, சமூக அறிவியலில் கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாநில அளவிலான  இம்பார்ட் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் போட்டி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு  அருகே உள்ள கே.எஸ்.ஆர் கல்வி நகரில் செயல்படும் கே.எஸ் ரங்கசாமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலாஜி கல்லூரியில் கடந்த 6 ந் தேதி  நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களை சேர்ந்த 165 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 


போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை கல்லூரி முதல்வர், கல்லூரி பேராசிரியர், துறைத்தலைவர், பள்ளி தலைமை  ஆசிரியர் என் 15 பேர் கொண்ட நடுவர்கள் குழு இவர்களிடம் அவர்கள் சமர்ப்பித்து இருந்த ஆய்வறிக்கையை வைத்து பல்வேறு  சந்தேகங்கள்,  பயன்கள்  குறித்து கேள்விமேல் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர். இவர்களின் பதில்களை கொண்டு வெற்றி பெற்ற வர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 3 அரசு பள்ளிகள் ஆங்கிலம், அறிவியல் ஆகிய இரண்டு பாடத்தில் முதலிடத்தையும், தமிழ் பாடத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.


திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ். அனிஷ் ஃ பாத்திமா தலைமையில் பூஜாஸ்ரீ,  ஜனனி, ஷாலினி, மீரா ஆகியோர் கொண்ட குழு ஆங்கிலப் பாடத்தில் பொது சுத்தம் மற்றும் விழிப்புணர்வு  என்ற தலைப்பில்  கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம்  பிடித்தனர். 


அதேபோல் பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ரக் ஷித் தலைமையில் சூர்யா,  மணிகண்டன், ரூபாதேவி,  பவதாரணி  ஆகியோர் கொண்ட குழு அறிவியல் பாடத்தில் கோழிப் பண்ணைகளை சுகாதாரமாகப் பேணி பராமரித்து பொருளாதார மேம்பாட்டை உயர்த்திக் கொள்வதற்கான ஆய்வு என்னும் தலைப்பில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.  


திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி ஜாஸ்மின் தலைமையில் பெமினா பர்வீன்,   ஷஜினா பானு,  சௌமியா ஆகியோர் கொண்ட குழு தமிழ் பாடத்தில் பாரம்பரிய உணவுகள் என்னும் தலைப்பில் கலந்துகொண்டு  மாநில  அளவில்  மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.     


பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, கே.எஸ்.ரங்கசாமி கல்வி  நிறுவனங்களின்  தாளாளர் கே.எஸ்.ரங்கசாமி, சமகர சிக் ஷா திட்ட மாநில முதுநிலை ஆலோசகர் அய்யாராஜ்,  பள்ளி கல்வித்துறை  மாநில ஒருங்கிணைப்பாளர் சுஜாதா, கே.எஸ்.ஆர் கல்வி நிறுவன துணைத்தலைவர் சீனிவாசன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்கள்  குழு தலைவருக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ்களை வழங்கினர். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களின் அரசு பள்ளிகளுக்கும்  கேடயம் வழங்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.ரமேஷ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்ததுபோல் இம்பார்ட் போட்டியிலும் மாநில அளவில் முதலிடம், மூன்றாம் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்கள் என்று கூறி பாராட்டினார். மேலும் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியை மெஹருன்னீசா,  பள்ளி ஆங்கில ஆசிரியைகள்  ஜெயலட்சுமி, ருக்குமணி.,  பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மஞ்சுளாமணி, அறிவியல் ஆசிரியர் அன்புசெல்வம் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் உதவி ஒருங்கிணைப்பாளர் கணேஸ்வரி செய்து இருந்தார்.


Previous Post Next Post