திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழாவின் தொடர்ச்சியாக நேற்று மறுஊடல் கோலாகலமாக நடந்தது. இதையட்டி அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிரிவலப் பாதையில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று திருவூடல் திருவிழா சுவாமிக்கும் அம்மனுக்கும் இடையே ஏற்படும் ஊடலை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று இந்த விழா நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு இத்திருவிழா நேற்று முன்தினம் திருவூடல் தெருவில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஊடல் காரணமாக அம்மன் கோவிலுக்கு சென்றார். அண்ணாமலையார் குமரக்கோவிலுக்கு சென்றார்.
இதையடுத்து அண்ணாமலையார் நேற்று அதிகாலை 5 மணியளவில் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு திரும்பிய அண்ணாமலையாருக்கும் உண்ணாமலையம்மனுக்கும் மறுஊடல் விழா கோலாகலமாக நடந்தது.
அப்போது அலங்கார ரூபத்தில் அம்மனுடன் எழுந்தருளி அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்