திருப்பூரில் புத்துயிர் பெறும் கும்மி ஆட்டம் : காலில் சலங்கை கட்டி கலக்கும் பெண்கள், கல்லூரி மாணவிகள்!!!

அழிந்து வரும் கும்மி ஆட்டத்தை மீட்டெடுக்கும் விதமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் 200க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நாட்டுப்புற பாடலுக்கு ஏற்றவாறு கும்மி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.


தமிழர்களின் பாரம்பரியமிக்க நாட்டுப்புறக்கலைகளான கும்மி ஆட்டம், ஒயிலாட்டம், சலங்கை ஆட்டம் உள்ளிட்ட கலைகள் நம் வாழ்வில் ஒன்றிணைந்த கலைகளாக



இருந்தன. டி.வி., சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களின் வளர்ச்சியாலும், நமது வாழ்க்கை முறை மாற்றங்களாலும், நாட்டுப்புறக் கலைகள் வழக்கொழிந்து போயிருந்தன.
 ஒரு சில இடங்களில் ஒரு சிலர் மட்டும் நாட்டுப்புறக்கலைகளை காக்கும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூரில் கும்மி ஆட்டம் மீளெழுச்சி பெற்று பரவலாக பெண்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.


திருப்பூரில் உள்ள பவளக்கொடி கும்மி குழு மூலம், திருப்பூர் நல்லூர் ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் இல்லத்தரசிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று நாட்டுப்புற பாடலுக்கு ஏற்ப கும்மி ஆட்டம் ஆடினர். நாட்டுப்புற பக்தி பாடல்கள், தமிழ் மொழி வாழ்த்து பாடல்களுக்கு ஆண்களும், பெண்களும் கும்மி ஆட்டம் ஆடியதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
 இது பற்றி பவளக்கொடி கும்மி குழுவின்  ஆசிரியர் விஸ்வநாதன் கூறுகையில் ‘நாட்டுப்புறக்கலைஞர்களால் மட்டும் ஆடியும், பாடியும் வரப்பட இந்த கும்மி கலையானது, திருப்பூரில் இல்லத்தரசிகள், கல்லூரி மாணவிகள் என அனைவராலும் ஆடும் கலையாக உருவெடுத்து உள்ளது.


இதற்காக 20 நாட்கள் பயிற்சி அளிக்கிறோம்.  திருப்பூரில் பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் கற்றுக்கொண்டு பவளக்கொடி கும்மி ஆட்டம் ஆடி வருகிறார்கள். பொதுமக்களிடத்தில் குறிப்பாக பெண்களிடத்தில் இந்த கலை நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்றார்.
  கும்மி ஆட்டம் ஆடுவது மனதுக்கு மகிழ்ச்சியையும், உடல் ஆரோக்கியத்தையும் தருவதாகவும், மேலும் கும்மி கலையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் பெருமையும் கிடைப்பதாக இல்லத்தரசிகளும், கல்லூரி மாணவிகளும் தெரிவித்தனர்.



 நாட்டுப்புறக்கலைஞர்கள் இது போன்ற கலைகளை நடத்திய போது கூட ஆர்வம் இல்லாமல்பார்த்த பொதுமக்கள்  தற்போது  பெண்களும், ஆண்களும் இணைந்து  கும்மி ஆட்டம் ஆடுகின்றனர்.   இவ்வாறு பெரும் வரவேற்பு அளிப்பதன் மூலம் பாரம்பரிய நாட்டுப்புறக்கலையான கும்மி ஆட்டம் மீண்டும் எழுச்சி பெறுகிறது என்பது பாராட்டக்கூடிய விஷயம். 


Previous Post Next Post