இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் குறித்து கலெக்டர் கொ.வீர ராகவ ராவ், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



 இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், என்மனங்கொண்டான் மற்றும் பிரப்பன்வலசை ஆகிய கிராமங்களிலுள்ள நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை கலெக்டர் கொ.வீர ராகவ ராவ்,வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழர்  திருநாளாம் பொங்கல் பண்டிகையினை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என்ற நோக்கில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000-த்துடன் 1 கிலோ பச்சரிசி,  1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர்  திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், இரண்டடி நீள கரும்பு உள்ளிட்ட பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.  அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 558 முழு நேர நியாய விலைக் கடைகளும், 217 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் என மொத்தம் 775 கடைகள் செயல்பட்டு வருகின்றன.



 3,63,128 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றன. பொதுக்கள் சிரமமின்றி பொங்கல் பரிசினை பெற்று பயனடையும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பு எந்தெந்த தேதியில் எந்தெந்த கிராம குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படவுள்ளது என்பது குறித்த விபரங்களை கிராம மக்கள் எளிதில் அறிந்துகொள்ள ஏதுவாக தேதி வாரியாக அட்டவணை தயார்  செய்து, அதனை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விளம்பர பதாகையாக அமைத்திடவும், தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பினை வழங்கிட  வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  அந்த வகையில்  கலெக்டர்  இராமநாதபுரம் வட்டம், பிரப்பன்வலசை மற்றும் என்மனங்கொண்டான் ஆகிய கிராமங்களிலுள்ள நியாயவிலைக்கடைகளுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.கிறிஸ்டோபர் ஜெயராஜ் உடனிருந்தார்.



 


Previous Post Next Post