வன்முறைகள் நிறுத்தப்பட்டால்தான் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கில் விசாரணை- உச்சநீதிமன்றம்.
நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள், வன்முறைகள் நிறுத்தப்பட்டால்தான் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வழக்கை விசாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் எப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவிடம் வழக்கறிஞர் வினீத் தண்டா ஒரு மனுவை அளித்தார். அதில், அமைதியை சீர்குலைக்கும் வகையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுகின்றன. இவற்றை சட்ட ரீதியாக தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி பாப்டே, நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறைகளை நிறுத்தினால்தான் சி.ஏ.ஏ. தொடர்பான வழக்குகளை விசாரிக்க முடியும். தற்போதைய நிலையில் வழக்குகளை விசாரித்தால் அமைதியை கொண்டுவர இயலுமா? என தெரியவில்லை.
உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்வதே அமைதியை கொண்டு வருவதற்குதான். நாடு தற்போது ஒரு கடினமான சூழ்நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, ஆகையால் மத்திய- மாநில அரசுகள் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.
மக்களின் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரத்தான் மக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர்.... கலவரங்கள் நின்ற பின்பு விசாரிப்பேன் என்பது..
"பணத்தை எப்போ தருவ ?
பணம் வந்தவுடன் தருவேன்....
பணம் எப்போ வரும் ?
தரும் போது வரும்... எனும் கதையாக இருக்கிறது, உச்ச நீதிமன்றம் இவ்வாறு கருத்து பற்றி கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது