பொங்கலின் சிறப்புகள்

கரும்பின் தத்துவ இனிப்பு!



பொங்கலில் முக்கிய இடம் பெறுவது கரும்பு. இது இனிமையின் அடையாளம். கரும்பு அடிமுதல் நுனிவரை ஒன்றுபோல இருப்பதில்லை. நுனிக்கரும்பு உப்புச்சுவையுடையது. அடிக்கரும்பு போல தித்திப்பாய் இனிக்கும். இதன்மூலம் கரும்பு உழைப்பின் அருமையை நமக்கு உணர்த்துகிறது. உழைப்பின் அருமையை உணர்ந்து செயல்பட்டால், தொடக்கத்தில் உப்புத்தன்மையைப் போல வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், அதன் முடிவில் கரும்புபோல இனிமையைத் தந்திடும். கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் முடிச்சுக்களும் இருந்தாலும் உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதேபோல வாழ்க்கையில் கடுமையான சோதனைகள் இருந்தாலும் அவற்றைக் கடந்து சென்றால் தான், இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பது தத்துவம். அதனாலேயே மகரசங்கராந்தியான பொங்கல் பண்டிகையில் கரும்பினை இறைவனுக்கு அர்ப்பணிக்கிறோம். மங்கலமாக வீட்டின் நிலைப்படியில் கரும்புகளை வைத்து அழகுபடுத்துகிறோம்.

மஞ்சள் குலை வாங்குவது ஏன்?



மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத் திகழும் மஞ்சள் மகிமை மிக்கது. மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள். அதனால் தான் சுமங்கலிப்பெண்கள் மஞ்சளை உடலில் பூசிக்கொள்கிறார்கள். புத்தாடை அணியும்போது< அதில் மஞ்சள் தடவி அணிகிறோம். எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக் கொடுக்கிறோம். திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட ஒரு சடங்கு இருந்தது. முனைமுறியாத அரிசியான அட்சதை தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர். எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வணங்குவதும் நம் வழக்கம். சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது அவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவதும் மங்கலத்தின் அடையாளம் தான். இப்படி மகிமை மிக்க மஞ்சள்கிழங்குச் செடியினை பொங்கல் நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர். அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில்" மஞ்சள் கீறுதல் ' என்னும் சடங்காகச்செய்வர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின் நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும் சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும் என்பதே இச்சடங்கின் நோக்கம்.

காப்பரிசி சாப்பிடுங்க!



பொங்கலன்று காதரிசி எனப்படும் வெல்லம் கலந்த பச்சரிசியை திருவிளக்கின் முன் படைக்க வேண்டும். பச்சரிசியை ஊற வைத்து, அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய், பிசைந்த வாழைப்பழம் ஆகியவற்றை கலக்க வேண்டும். குழந்தைகளுக்கு முதன்முதலாக காதுகுத்தும் சமயத்தில் இந்த அரிசியை உறவினர்களுக்கு கொடுப்பார்கள். இதனால் இதற்கு காதரிசி என பெயர் வந்தது. காப்பரிசி என்றும் சொல்வர். குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.

பொங்கலன்று இரவு பூஜை!




பொங்கலன்று காலைநேர சூரிய பூஜை எவ்வளவு முக்கியமோ, அதே போல இரவு நேர பூஜையும் முக்கியம். அன்று இரவு முன்னோர்களை வழிபட வேண்டும். ஒரு தலைவாழை இலையை குத்துவிளக்கின் முன் விரித்து, அதில் பலகாரங்கள், வெற்றிலை, பாக்கு, பழம், புத்தாடைகள் வைக்க வேண்டும். முன்னோரை மனதார வணங்கி, ஆடைகளை ஏழை எளியவர்களுக்கு வழங்க வேண்டும். நம் குடும்பத்தில் மணமாகாத கன்னிப்பெண்கள் இறந்து போயிருந்தால், அவர்களின் நினைவாக, உறவுப்பெண்களில் கஷ்டப்பட்ட பெண் ஒருவருக்கு திருமணத்திற்கான உதவியைச் செய்ய வேண்டும்.

தண்ணீருக்கு மரியாதை!



குழந்தைகளுக்கான பொங்கலை சிறுவீட்டுப் பொங்கல் என்றும் சொல்வர். தை மாதத்தில் வரும் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இந்த பொங்கலை வைக்கலாம். அன்று அதிகாலையில் வாசலில் சாணப்பிள்ளையார் பிடிப்பது போல, சாணத்தை உருட்டி வைத்து அதில் பூவரசு, பூசணி, செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். மணலால் சிறு வீடு போல ஓவியம் வரைந்து, அதன் நடுவே பொங்கல் பானை வைத்து பொங்கலிட வேண்டும். ஒரு முறத்தின் (சுளவு) பின்பக்கம் சிறு சிறு வாழை இலையை விரித்து அதில் சிறிதளவு பொங்கல், பழம் வைத்து அதன் மீது கற்பூரம் ஏற்றி நீர்நிலையில் மிதக்க விட வேண்டும். கங்காதேவிக்கு பூஜை செய்ததுடன், தண்ணீரில் வாழும் மீன் முதலான ஜீவன்களுக்கு தானமளித்த புண்ணியமும் நமக்கு கிடைக்கும். அன்று மதியம் குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களை திட்டாமல் சாப்பிட வைக்க வேண்டும். நீர்நிலைகளுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக வைக்கப்பட்ட இந்தப் பொங்கலை இப்போதும் வைத்து, எதிர்காலத்திலாவது தண்ணீருக்கு மரியாதை செய்ய பழகிக் கொள்வோம்.

காவிபட்டை ரகசியம்
ஒரு காலத்தில் வீட்டில் வெள்ளையடிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது. இப்போது போல விதவிதமான வண்ணங்களை பூசும் வழக்கமில்லை. எனவே வீட்டு வாசல் சுவரில் வெள்ளையடித்து, நடுவில் காவிநிற பட்டையை அடிப்பார்கள். காவி இறைவனை சென்றடைவதற்குரிய நிறம். துறவிகளுக்குரிய அடையாளம்.
இல்லறத்தில் இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில், மனதளவிலாவது துறவறத்தை கடைபிடிக்க வேண்டும், பற்றற்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. பொங்கல் கட்டி எனப்படும் பொங்கல் பானை வைக்கும் கற்களிலும் (அடுப்பு) வெள்ளையடித்து இடையிடையே காவிபட்டை (நீளமான கோடு) இட வேண்டும். கோயில் மதில் சுவர்களில் வெள்ளை, காவி நிற கோடுகள் போடுவதன் ரகசியம் இதுவே. மேலும் இந்தக் கோடுகள் கள்ளமற்ற பால் மனமும், செம்மையான (உறுதியான) மனமும் வேண்டும் என்பதையும் இங்கு வரும் பக்தன் பெற்றுச் செல்ல வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

தைமாத முகூர்த்த சிறப்பு!
இருமனம் இணையும் திருமண வைபவத்தை, தை மாத முகூர்த்தங்களில் நடத்துவதை பலரும் விரும்புவர். மார்கழி பாவை நோன்பில் வாசலில் கோலமிட்டு பூசணிப்பூவினை வைத்து நல்ல மணமகன் வேண்டி காத்திருந்த கன்னியர் தை மாதத்தில் மாலைசூடுவது வழக்கம். திருமணத்திற்கு ஒருபெண் தயாராகிவிட்டாள் என்பதன் அறிகுறியாகவே பொங்கல் நாளில் வாசலில் கூரைப்பூ வைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆவாரம்பூ, மாவிலை, வேப்பஇலை, கண்ணுப்பிள்ளைச் செடி என்று தோரணங்கள் கட்டுவது மங்கலநிகழ்ச்சிக்கான அடையாளமே. இதுவே, நாளடைவில் காளையை அடக்குதல், இளவட்டக்கல்லினை தூக்குதல் என்று வீரசாசகவிளையாட்டு நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு மாறின. காலங்கள் மாறினாலும், நம் பண்பாட்டு அடையாளங்கள் மாறுவதில்லை. வழிவழியாக பழகிவந்த தைமுகூர்த்தங்களில் திருமணம் நிகழ்த்துவதையே இன்றும் மக்கள் விரும்புகிறார்கள்.

பட்டத்திருவிழா
பொங்கல் பண்டிகையை வடமாநிலங்களில் பட்டம் பறக்கவிட்டு கொண்டாடுகின்றனர். குஜராத் மாநிலத்தில் "மகர சங்கராந்த்' என்ற பெயரில் இவ்விழாவை,பெரிய அளவில் கொண்டாடுகின்றனர். பெரியோர், சிறியோர், ஏழை, பணக்காரர் என்ற பாரபட்சமின்றி ஒற்றுமையை வெளிப்படுத்தும் விழா கொண்டாடப்படும். மக்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்குச் சென்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். மேலும், விதவிதமான பட்டங்களைப் பறக்க விடுவர். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் தங்கள் நாட்டின் சின்னம், கலாச்சாரம், நாட்டின் பெருமைகளை வெளிப்படுத்தும் படங்கள் அச்சிட்ட பட்டங்களைப் பறக்க விடுவர்.



 

Previous Post Next Post