முன்னோர்கள் வழிபாடு என்பது நம்மில் பெரும்பாலும் காலம் காலமாக கடைபிடிது வருகிறோம். அதில் அம்மாவாசை அன்று தர்பணம் கொடுத்து முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு வழிபடுவது வழக்கம். அதில் முக்கியமாக தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை குறிப்பிடத்தக்கது.
தை அமாவாசை என்பது சூரியனின் முக்கிய நாள். சூரியன் தை மாதத்தில் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். இதனை புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது.
மகரத்தில் சூரியன் இருக்கக் கூடிய தை அமாவாசை
மேஷத்தில் சூரியன் இருக்கக் கூடிய சித்திரை அமாவாசை
கடகத்தில் சூரியன் இருக்கக் கூடிய ஆடி அமாவாசை
துலாம் ராசியில் சூரியன் இருக்கக் கூடிய மகாளய அமாவாசை
இந்த நான்கு அமாவாசைகளும் புண்ணிய காலமாக பார்க்கப்படுகிறது. பலரும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையை பெரியளவில் கடைப்பிடிப்பதில்லை. தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார். அதாவது சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார். இதனால் சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர். சூரியனும், சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகின்றது.
நாம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு பிடித்தமான படையல் போட்டு வழிபட்டால் அவர்கள் மன திருப்தி அடைந்து நல்லாசி புரிவார்கள். தெய்வத்தை தொழுது பெறக்கூடிய ஆசிர்வாதத்தை விட, நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசி வாங்குவது தான் நம் குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும் என்பது ஐதீகம்.