திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அரசங்காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சுடலை ராஜன் என்ற மகன் உள்ள நிலையில் சுடலை ராஜனின் மனைவி குழந்தை பிறந்த பின்பு சுடலை ராஜனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
அதனால் சுடலைராஜன் தனது இரண்டரை வயது குழந்தையை கவனிக்க முடியாமல் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.இந்நிலையில் மாரியப்பன் கடந்த 24 ஆம் தேதி காப்பகத்தில் இருந்த குழந்தையை பழனி கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். கோவிலில் இருந்து திரும்பி வரும்போது மாரியப்பன் குழந்தையோடு சேர்த்து அறிமுகமில்லாத 23 வயது பெண்ணை தன்னுடன் அழைத்து வந்துள்ளார். வீட்டு வேலைகள் மற்றும் குழந்தையை கவனிப்பதற்காக அழைத்து வந்ததாக மாரியப்பன் சுடலை ராஜனிடம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் 24-ஆம் தேதி மாலை வீட்டில் இருந்த குழந்தை மற்றும் அந்த பெண் இருவரும் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து சுடலை ராஜன் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.குழந்தை கடத்தப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைத்து திருப்பூர் கோவை ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையை துவங்கினர். இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் அந்தப் பெண் இருப்பதை கண்ட போலீசார் உடனடியாக கைது செய்தனர். விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற பெண் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அல்போன்ஸ் மேரி என்பதும் உறவினர்கள் யாரும் இல்லாமல் தனிமையில் இருந்தவர் பேருந்து மற்றும் ரயில்களில் இலவசமாக பயணிப்பதற்காக குழந்தையை தூக்கி சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திசா மிட்டல் குழந்தையை வியாபார நோக்கத்திற்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் கடத்தப்படவில்லை எனவும் யாருமில்லாத அந்தப் பெண் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக தூக்கிச் சென்றதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.