புதுச்சேரி: புதுச்சேரியில்துமக்களின் காலில் விழுந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு கேட்ட மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் என நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அச்சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள குறிஞ்சி நகரில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குறிஞ்சி நகர் மக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்களது வீடுகளில் வண்ண கோலமிட்டு மத்திய அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது தனக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற ஒரு பெண்மணியின் காலில் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி திடீரென காலில் விழுந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு கோரினார்.
பிரச்சாரத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தூண்டுபவர்கள் காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சியினர் தான். சட்டத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். இந்த சட்டத்தை தெளிவாக படித்து புரிந்துகொண்டு எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு வரலாம். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர் என அமைச்சர் சுரேஷ் அங்காடி தெரிவித்தார்.