திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவண்ணாமலையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்



திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்களிடமிருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்றுக் கொண்டார். இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 404 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.


மேலும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் மற்றும் நகரத்தை சேர்ந்த லட்சுமிகாந்தன் என்பவர் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இறந்தமைக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. ஒரு லட்சம் மின்னனு பரிவர்த்தனை மூலம் பெறுவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக 2 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு காதொலி கருவி ரூ.1600 மதிப்பிலும்,  தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டத்தின் கீழ் ஈமச்சடங்கு இயற்கை மரணம் உதவித்தொகை காசோலை 1 மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.17000 மதிப்பிலும் ஆகமொத்தம் 3 நபர்களுக்கு ரூ.18,600 மதிப்பிலான நலத்திட்ட உதவி மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.இரத்தினசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லாவண்யா, பழங்குடியினர் நல அலுவலர் இளங்கோ மற்றும் துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சு.சரவணன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Previous Post Next Post