மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டி உரிமையாளர் ஸ்ரீதர் என்பவர் உயிரிழந்தார். அதேபோல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த செல்லப்பாண்டியன் திடீர் உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று காலை முதல் மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. 739 காளைகளை அடக்க 688மாடுபிடி வீரர்கள் களத்தில் இருந்தனர். காலை முதல் மாலை வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஜல்லிக்கட்டு களம் சுறு சுறுவென்று இருந்தது.
இதில் பங்கேற்க தமது மாட்டுடன் சோழவந்தானை சேர்ந்தஸ்ரீதர் என்ற இளைஞர் வந்திருந்தார். அவரது மாடு களத்தில் இருந்து வெளியே வந்த போது அதனை பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு மாடு ஸ்ரீதரின் வயிற்று பகுதியில் முட்டியது. இதில் சரிந்து விழுந்த ஸ்ரீதர் அலங்காநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொறியியல் பட்டதாரியான இவர் சட்டக் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்வையாளர் மரணம்:
இதேபோல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்த செல்லப்பாண்டி என்பவர் கூல் டிரிங்ஸ் குடிக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.